×

கோடை மழையால் தஞ்சையில் 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் அழுகி நாசம்

*விவசாயிகள் கவலை

தஞ்சாவூர் : கோடை மழையால் தஞ்சையில் அறுவடை நேரத்தில் இருந்த 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் அழுகி நாசமானதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டத்தில் 31,700 ஏக்கர் பரப்பளவில் பம்ப் செட் மூலம் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக மாவட்டம் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு சூறைவாளி காற்றுடன் கனமழை பெய்தது.

தஞ்சாவூர் அருகே கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் முற்றிலும் சாய்ந்து தேங்கி நிற்கும் மழைநீரில் மூழ்கி கிடக்கிறது. இதனால் நெற் பயிர்கள் அழுகியும், முளைக்கவும் தொடங்கியதால் விவசாயிகள் கவலையுடன் உள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஏக்கருக்கு ₹30,000 வரை செலவு செய்து சாகுபடி செய்தோம். அறுவடை நேரத்தில் பெய்த கோடை மழையால் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை பயிர்கள் நீரில் மூழ்கி கிடப்பதால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழைநீர் வடியாததால் பயிர்கள் மழை நீரில் அழுக தொடங்கிவிட்டது. அப்படியே அறுவடை செய்தாலும், பாதிக்கு பாதி சேதம் தான். இதனால் செலவு செய்த தொகைக்கூட கிடைக்குமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கோடை மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேளாண்துறை அதிகாரிகள் கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

The post கோடை மழையால் தஞ்சையில் 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் அழுகி நாசம் appeared first on Dinakaran.

Tags : Tanjore ,Thanjavur ,Thanjavur district ,Dinakaran ,
× RELATED தஞ்சை மாவட்டத்தில் இயற்கை...