*போலீசார் தீவிர விசாரணை
திட்டக்குடி : திட்டக்குடி அருகே பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள கொடிகளம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி நந்தினி(28). சக்திவேல் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
இவர்களுக்கு தஸ்வின்குமார் என்ற ஆண் குழந்தை பிறந்து 30 நாட்கள் ஆகிறது.இந்நிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் குழந்தையை தனது வீட்டின் முற்றத்தில் படுக்க வைத்து விட்டு பின்பக்கம் பாத்ரூமுக்கு நந்தினி சென்று விட்டார். மீண்டும் வந்து பார்க்கும்போது குழந்தையின் அருகில் இரண்டு நாய்கள் நின்று கொண்டு இருந்ததை கண்டு அந்த நாயை விரட்டிவிட்டு நந்தினி குழந்தையை சென்று தூக்கி உள்ளார்.
அப்போது குழந்தை பேச்சு, மூச்சு இன்றி கிடந்துள்ளது. உடனே ஆட்டோ மூலம் பெண்ணாடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது என தெரிவித்துள்ளனர்.
பின்னர் குழந்தையை வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். தகவல் அறிந்த திட்டக்குடி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் கழுத்தில் சிகப்பு கலரில் அரைஞாண் கயிறுடன் கூடிய தாயத்து ஒன்று கட்டப்பட்ட இருந்துள்ளது.
நாய்கள் கடித்ததற்கான காயங்கள் எதுவும் இல்லை என கூறப்படுகிறது. ஆனால் கயிற்றால் இறுக்கப்பட்டது போன்ற காய வடு மட்டும் உள்ளது. குழந்தையுடன் அவரது தாய் நந்தினி மட்டும் இருந்ததாக கூறப்படுகிறது. நந்தினி நேற்று தான் தனது சொந்த ஊர் ஆவினங்குடியில் இருந்து தற்போது குடியிருக்கும் வீட்டிற்கு புதிதாக குடிவந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
The post திட்டக்குடி அருகே பரபரப்பு பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை மர்ம சாவு appeared first on Dinakaran.