×

சாலையில் திரியும் மாடுகளால் விபத்து, காயம் ஏற்பட்டால் உரிமையாளர் மீது வழக்கு: ஆலோசனை கூட்டத்தில் முடிவு

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் சுற்றித்திரியும் மாடுகள் மற்றும் நாய்களால் ஏற்படும் இடையூறுகளுக்கு தீர்வு காணும் வகையில், அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம், மேயர் பிரியா தலைமையில், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மேயர் பிரியா பேசியதாவது: மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் முதல் முறையாக பிடிபட்டால் ரூ.5,000 அபராதமும், 2வது முறையாக பிடிபட்டால் ரூ.10,000 அபராதமும் மாட்டின் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படுகிறது.

2023ம் ஆண்டு 4,237 மாடுகள் பிடிக்கப்பட்டு ரூ.92,04,700 அபராதமும், 2024ம் ஆண்டு கடந்த 25ம் தேதி வரை 1,212 மாடுகள் பிடிக்கப்பட்டு ரூ.43.85 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் சட்டசபையில் அறிவித்தபடி, 3வது முறையாக பிடிபடும் மாடுகளை ஏலம் விடுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், பிடிபடும் மாடுகளைப் பராமரிப்பதற்காக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் வருவாய் துறையினருடன் இணைந்து கூடுதல் இடங்கள் கண்டறியப்பட்டு அவற்றில் மாடுகளை வைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாடுகளைப் பிடிக்கும் போது விதிக்கப்படும் அபராதத் தொகையினை மேலும் அதிகப்படுத்தி வசூலித்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கண்காணிப்பின்றி தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கப்படும் பொழுது அவற்றை அடையாளப்படுத்த மைக்ரோ சிப் பொருத்தவும், அதன் மூலம் அதே மாடு மூன்றாம் முறை பிடிபட்டால் அவற்றை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
சுற்றித் திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு காயம் ஏற்பட்டாலோ, விபத்து ஏற்பட்டாலோ, அல்லது மாடுபிடிக்கும் பணியின் போது உரிமையாளர்கள், மாநகராட்சிப் பணியாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி பணி செய்ய விடாமல் தடுத்தாலோ அவர்கள் மீது கடுமையான சட்டப் பிரிவின் கீழ் காவல்துறை மூலம் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள குறிப்பிடத்தக்க இடங்களில் மாடுகளை வளர்த்திடவும், வெளியில் விடவும் தடை செய்வதற்கு சட்ட ஆலோசனைகளைப் பெற்று அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும். சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்கள் மாநகராட்சி பணியாளர்களால் பிடிக்கப்பட்டு, விலங்குகள் நல வாரிய வழிகாட்டுதலின்படி கருத்தடை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, வெறிநாய்க்கடி நோய்ப் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இதற்காக 78 பயிற்சி பெற்ற நாய் பிடிக்கும் பணியாளர்கள், 16 நாய் பிடிக்கும் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பிடிக்கப்படும் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் புளியந்தோப்பு, கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம், சோழிங்கநல்லூர், லாயிட்ஸ் காலனி ஆகிய பகுதிகளில் உள்ள நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் உள்ளன. 2023ம் ஆண்டு 19,640 நாய்கள் பிடிக்கப்பட்டு, 14,885 நாய்களுக்கும், 2024ம் ஆண்டு 24.06.2024 வரை 9,607 நாய்கள் பிடிக்கப்பட்டு, 6,966 நாய்களுக்கும் கருத்தடை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

தற்பொழுது, புளியந்தோப்பு, கண்ணம்மாபேட்டை மற்றும் லாயிட்ஸ் காலனி ஆகிய 3 மையங்கள் ரூ.20 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. மேலும், இரண்டு புதிய நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் தொடங்கப்பட உள்ளன. 7 நாய் பிடிக்கும் வாகனங்கள், நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் 3 வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு தெருநாய்களுக்கு கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post சாலையில் திரியும் மாடுகளால் விபத்து, காயம் ஏற்பட்டால் உரிமையாளர் மீது வழக்கு: ஆலோசனை கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Ribbon House ,Mayor ,Priya ,Chennai Corporation ,Dinakaran ,
× RELATED சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்;...