×

எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் தேர்தலை ஆக.30க்குள் நடத்த வேண்டும்: தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சங்க விதிகளை பின்பற்றி ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு பார்கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் தொடர்ச்சியாக இருமுறை நிர்வாகிகளாக பொறுப்பு வகித்தவர்கள் மூன்றாவது முறையாக போட்டியிடக்கூடாது என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் கடந்த 2019ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் இருமுறை தலைவராக பதவி வகித்த எஸ்.சந்தன்பாபு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் டி.மோகன் ஆஜராகி, எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்துக்கான அடிப்படை விதிகளில் தொடர்ச்சியாக இருமுறை நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் இருப்பவர்கள், மூன்றாவது முறையாக போட்டியிடக்கூடாது என்று எந்த நிபந்தனையும் இல்லை.

விதிகளின்படி மனுதாரர் மூன்றாவது முறையாக தலைவர் பதவிக்கு போட்டியிட எந்த சிக்கலும் இல்லை. ஆனால் பார் கவுன்சில் அதை தடுக்கும் நோக்கில் எழும்பூர் நீதிமன்றத்துக்கு மட்டும் அதுபோன்ற உத்தரவை பிறப்பித்துள்ளது என்றார். அதற்கு பார் கவுன்சில் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.கே.சந்திரசேகர், வழக்கறிஞர்கள் சங்கத்துக்கான தேர்தல் டர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையிலேயே எழும்பூர் நீதிமன்றத்துக்கு அவ்வாறு உத்தரவிடப்பட்டது.

அப்போது, எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன், வழக்கு நிலுவையில் இருப்பதால் கடந்த 2019ல் நடக்க வேண்டிய தேர்தல் நடைபெறவில்லை. இதனால், பதவிக்காலம் முடிந்தும் நிர்வாகிகள் தொடர்ந்து பதவியில் உள்ளனர் என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சங்கம் என்பதும் நீதித்துறையின் ஒரு அங்கம் தான். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்துக்கான தேர்தல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் சுமுகமாக நடத்தி, அவற்றை கண்காணிக்கும் பொறுப்பு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு உள்ளது.

ஒழுங்கீனத்தில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பார் கவுன்சில், ஜனநாயக ரீதியில் வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கான தேர்தலையும் அமைதியான முறையில் நடத்த வேண்டும். பதவிக்காலம் முடிந்த பின்னரும் சங்க நிர்வாகிகள் பதவியில் நீடிப்பதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

எனவே, எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் அடிப்படை விதிகளைப் பின்பற்றி ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் சங்கத்தின் தேர்தலை தமிழ்நாடு பார் கவுன்சில் நடத்தி முடிவுகளை அறிவித்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் தேர்தலுக்கு தேவையான பிற அலுவலர்களையும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலே நியமித்துக் கொள்ளலாம். இந்த தேர்தலுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

The post எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் தேர்தலை ஆக.30க்குள் நடத்த வேண்டும்: தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Egmore Court Lawyers ,Court ,Tamil Nadu Bar Council ,Chennai ,Chennai High Court ,Egmore Court Advocates Association ,Chennai Egmore Court Advocates Association ,Egmore Court Advocates ,Dinakaran ,
× RELATED இளம் வழக்கறிஞர்களுக்கு உதவி தொகை...