×

சென்னையில் இன்று முதல் இந்தியா-தெ.ஆ பெண்கள் டெஸ்ட்: ரசிகர்களுக்கு அனுமதி இலவசம்

சென்னை: இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா பெண்கள் அணி முதலில் 3 ஆட்டங்களை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. பெங்களூரில் நடந்த அந்த தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியதுடன் தென் ஆப்ரிக்காவை ஒயிட் வாஷ் செய்தது. தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் தெ.ஆ விளையாடுகிறது. இந்த 2 தொடர்களும் சென்னையில் நடைபெற உள்ளன. டெஸ்ட் ஆட்டம் இன்று காலை சென்னை சேப்பாக்கம் அரங்கில் தொடங்குகிறது.

ஒருநாள் தொடரை வென்றதை போல் ஒரே ஒரு ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரையும் வெல்லும் முனைப்பில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி களம் காண உள்ளது. அதற்கேற்ப இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு நாள் தொடரில் இடம் பெற்றிருந்த மந்தானா, ஜெமீமா, பூஜா, ஷப்னம், ரிச்சா ஆகியோரை தவிர மற்ற வீராங்கனைகள் இடம் பெறவில்லை.

அதே நேரத்தில் ஒரு நாள் தொடர் தோல்விக்கு பதிலடி கொடுக்க லாரா தலைமையிலான தென் ஆப்ரிக்காவும் தீவிரமாக இருக்கிறது. எனினும் ஒரு நாள் தொடரில் களம் கண்ட அதே தெ.ஆ அணி மீண்டும் இன்றும் விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் ஆட்டத்தை பார்க்க 5நாட்களும் ரசிகர்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்படுவர்.

நேருக்கு நேர்
* இந்த 2 அணிகளும் இதுவரை மோதிய இரண்டே 2 டெஸ்ட் ஆட்டங்களிலும் இந்தியாவே வென்றுள்ளது.

* முதலில் 2002ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவின் பாரலில் நடந்த டெஸட் ஆட்டத்தில் அஞ்சும் சோப்ரா தலைமையிலான இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. அந்த டெஸ்ட்டில் தெ.ஆ வீராங்கனைகள் 7 பேர் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் அறிமுகமாயினர்.

* மிதாலி ராஜ் தலைமையில் 2வதாக 2014ம் ஆண்டு மைசூரில் நடந்த டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் 14 ரன் வித்தியாசத்தில் வென்றது. தமிழக வீராங்கனை திரிஷ் காமினி 192ரன் விளாசினார்.

* அதில்தான் 8 தெ.ஆ வீராங்கனைகளும், 3 இந்திய வீராங்கனைகளும் முதல் முறையாக சர்வதேச டெஸ்ட் களத்தில் விளையாடினர்.

The post சென்னையில் இன்று முதல் இந்தியா-தெ.ஆ பெண்கள் டெஸ்ட்: ரசிகர்களுக்கு அனுமதி இலவசம் appeared first on Dinakaran.

Tags : India-South Africa Women's Test ,Chennai ,South Africa women's team ,India ,Bangalore ,South Africa ,India-TA Women's Test ,Dinakaran ,
× RELATED மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: ரசிகர்கள் இலவசமாகப் பார்க்கலாம்