×

மன்னராட்சியின் அடையாளமான செங்கோலை மக்களவையில் இருந்து அகற்ற வேண்டும்: சமாஜ்வாடி கோரிக்கை சபாநாயகர் நிராகரிப்பு


புதுடெல்லி: மக்களவையில் செங்கோலை அகற்ற வேண்டும் என்று சமாஜ்வாடி எம்பி ஆர்கே சவுத்திரி கோரிக்கை வைத்தார். அதை சபாநாயகர் நிராகரித்தார். புதிய நாடாளுமன்ற கட்டிடம் கடந்த ஆண்டு மே 28ம் தேதி திறக்கப்பட்டது. அன்று தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட செங்கோலை மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே பிரதமர் மோடி நிறுவினார். தற்போது 18வது மக்களவை தேர்தல் முடிந்து பிரதமர் மோடி 3வது முறையாக பதவியேற்றுள்ளார். 2வதுமுறையாக ஓம்பிர்லா சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சி எம்.பி., ஆர்.கே.சவுத்ரி, மக்களவையில் வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்,’ சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும். நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோவில். அரசர் அல்லது இளவரசரின் மாளிகை அல்ல. மன்னராட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக திகழ்வது செங்கோல்.

செங்கோலை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாார். இதற்கு பாஜ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து ஷெஹ்சாத் பூனவல்லா கூறுகையில், ‘இந்திய கலாசாரத்தை இழிவுப்படுத்த சமாஜ்வாடி கட்சி ஒருபோதும் தயங்கியதில்லை. தமிழ்நாட்டை அவமதிக்கும் வகையில் செங்கோலை நாடாளுமன்றத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். மேலும், தமிழ்நாட்டின் செங்கோலை இழிவுப்படுத்துவதை திமுகவும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினும் ஏற்றுக் கொள்வார்களா?.

தமிழ்நாட்டிற்கு உரிய மரியாதை கிடைத்து வருகிறது. ஆனால் சமாஜ்வாடி கட்சி அதனை எதிர்க்கிறது. அவர்கள் வெளிப்படையாக தமிழ் மற்றும் இந்திய கலாச்சாரத்தை அவமரியாதை செய்கிறார்கள்’ என்று தெரிவித்தார். இந்நிலையில், செங்கோலை அகற்றக் கோரிய சமாஜ்வாதி கட்சி எம்பி ஆர்.கே.சவுத்ரியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என பாஜ எம்பிக்கள் சபாநாயகரிடம் முறையிட்டனர். அதனடிப்படையில் செங்கோலை அகற்ற வேண்டும் என்ற சமாஜ்வாதி எம்.பி., சவுத்ரி விடுத்த கோரிக்கையை சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரித்தார்.

இந்த கோரிக்கை பற்றி சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில்,’ செங்கோல்’ நிறுவப்பட்டபோது, ​​பிரதமர் அதற்கு தலைவணங்கினார். ஆனால் இந்த முறை பதவிப்பிரமாணம் செய்யும்போது அவர் தலைவணங்க மறந்துவிட்டார். எங்கள் எம்பி அதை பிரதமருக்கு நினைவூட்ட விரும்பினார் என்று நினைக்கிறேன்’என்றார்.

காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறுகையில்,’ செங்கோல் என்பது அரசாட்சியை குறிக்கிறது. அது முடிந்துவிட்டது என்பதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். மக்கள் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை நாம் கொண்டாட வேண்டும்’ என்றார். ஆர்ஜேடி எம்பியும் லாலு பிரசாத் யாதவின் மகளுமான மிசா பார்தி கூறுகையில்,’ இதைக் கோரியவர்கள் யாராக இருந்தாலும், நான் அதை வரவேற்கிறேன்’ என்று கூறினார்.

* ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை; எல். முருகன்
ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் எல். முருகன் கூறுகையில்,’ செங்கோல் ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை. திருக்குறளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அரசாங்கத்தில் செங்கோல் எவ்வாறு பங்கு வகிக்கிறது என்பதைப் பற்றி பேசுகிறது. இந்தியா சுதந்திரம் பெற்றபோது, ​​ தங்கத்தால் செய்யப்பட்ட ஐந்தடி நீளமுள்ள செங்கோல் திருவாவடுதுறை ஆதீனத்தால் டெல்லிக்கு அனுப்பப்பட்டது. அதன்பின் செங்கோலுக்கு மதிப்பு அளிக்கப்படவில்லை.

அதன்பின்னர், பிரதமர் மோடி செங்கோல் எங்கு வைக்கப்பட்டுள்ளது (அலகாபாத் அருங்காட்சியகம்) என்பதைக் கண்டுபிடித்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு கொண்டு வந்தார். தமிழக ஆதீனங்களால் சடங்குகள் நடத்தப்பட்ட பின்னர் புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது. செங்கோல் நியாயமான அரசை குறிக்கிறது. இந்தியா கூட்டணி செங்கோலை மதிப்பதில்லை’ என்றார்.

* செங்கோல் இந்தியாவின் பெருமை: யோகி ஆதித்யநாத்
உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில்,’ இந்திய நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதுமே மதித்ததில்லை. ‘செங்கோல்’ பற்றிய அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் கண்டனத்துக்குரியது மட்டுமின்றி அவர்களின் அறியாமையையும் காட்டுகிறது.

குறிப்பாக தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான இந்தியா கூட்டணிக் கட்சிகளின் அறியாமையை காட்டுகிறது. ‘செங்கோல்’ இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள் ஒன்று. பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் செங்கோலுக்கு உயரிய மரியாதையை அளித்து இந்தியர்கள் அனைவருக்குமே பெருமை சேர்த்துள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post மன்னராட்சியின் அடையாளமான செங்கோலை மக்களவையில் இருந்து அகற்ற வேண்டும்: சமாஜ்வாடி கோரிக்கை சபாநாயகர் நிராகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Lok ,Sabha ,Speaker ,Samajwadi ,New Delhi ,RK Chowdhury ,Lok Sabha ,Tamil Nadu ,
× RELATED மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா...