×

அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சிக்கு ஏதுவாக கூட்டுறவு அமைப்புகள் மூலம் ரூ1 லட்சம் கோடி கடன் உதவி: பேரவையில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு


சென்னை: தமிழ்நாட்டில் அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சிக்கு ஏதுவாக, கூட்டுறவு அமைப்புகள் மூலம் ரூ1 லட்சம் கோடி கடன் உதவி வழங்கப்படும் என்று பேரவையில் கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று மாலை கூட்டுறவு துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பிறகு, புதிய அறிவிப்புகளை வெளியிட்டு துறையின் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசியதாவது:

* விவசாயிகள், ஏழை எளிய நடுத்தர மக்கள், சுய உதவிக் குழுக்கள், மாற்றுத்திறனாளிகள் போன்ற அனைத்து தரப்பினரின் பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்திடும் வகையில் மாநிலத்தில் உள்ள அனைத்து வகை கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் ரூபாய் ஒரு லட்சம் கோடி கடன்கள் நடப்பு நிதியாண்டில் வழங்கப்படும். இதன் மூலம் மாநிலம் முழுவதும் சீரான பொருளாதார வளர்ச்சி ஏற்பட வழிவகை செய்யப்படும்.

* விவசாயிகள் விளைவித்திடும் விளைபொருட்களின் விலை சரிவு ஏற்படும் சமயங்களில் அவற்றை சேமித்து நல்ல விலை கிடைக்கும் சமயங்களில் நியாயமான விலையில் விற்பனை செய்ய ஏதுவாகவும், உணவு தானியங்களை பாதுகாப்பாக சேமித்து வைக்கவும், விளைபொருட்கள் மீது உடனடி ஈட்டுக்கடன் வசதி பெறவும் விவசாயிகளின் நலனுக்காக கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 25,000 மெட்ரிக் டன் கொள்ளளவுடன் நவீன தானிய சேமிப்பு கிடங்குகள் கூட்டுறவு அமைப்புகள் மூலம் கட்டப்படும்.

* நுகர்வோருக்கு தரமான காய்கனிகள் நியாயமான விலையில் கிடைப்பதற்கு ஏதுவாக தமிழ்நாட்டில் முக்கிய பெருநகரங்களில் காய்கனி அங்காடிகள் அமைக்கப்படும். காய்கனி விளையும் ஊட்டி, திண்டுக்கல் மற்றும் கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளிலிருந்து கொள்முதல் செய்து அங்காடிகளுக்கு கொண்டு சேர்த்திட சிறப்பு காய்கனி வழித்தடங்கள் உருவாக்கப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும், நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் காய்கனிகள் கிடைக்க வழிவகை ஏற்படும்.

* பொது விநியோக திட்ட நியாயவிலைக் கடைகளுக்கு நுகர்பொருட்களை விநியோகம் செய்வதற்கு புவியிடங்காட்டியுடன் கூடிய இ-வழித்தடம் ஏற்படுத்தப்படும்.

* தமிழ்நாட்டில் கூட்டுறவு தொடர்பான பணிகளை மேம்படுத்தும் வகையில் தேசிய அளவிலான கூட்டுறவு கருத்தரங்கம் நடத்தப்படும்.

* அனைத்து கூட்டுறவு அலுவலகங்கள் மற்றும் சங்கங்களின் பணிகள் கணினிமயமாக்கப்படும்

* கூட்டுறவுச் சங்கங்கள் / வங்கிகள் மூலம் இணையவழி கடன் வழங்கும் வசதி ஏற்படுத்தப்படும்.

* கூட்டுறவுச் சங்க சேவைகளை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளவும், அலுவலர்கள் களப்பணிகள் மேற்கொள்ளவும் ஏதுவாக புதிய “கூட்டுறவு செயலி” உருவாக்கப்படும்.

* தமிழ்நாட்டின் அனைத்து மாநகராட்சிகளிலும் மற்றும் பெருநகரங்களிலும் கூட்டுறவு சில்லறை விற்பனை நிலையங்கள் தொடங்கப்படும்.

* கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் உருவாக்கப்படும்.

* உறுப்பினர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக சுய உதவிக்குழு கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கப்படும்.

* மதுரை மாவட்டம், திருமங்கலம் மற்றும் பேரையூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் பருப்பு மற்றும் சிறுதானியங்கள் பதனிடும் அலகுகள் அமைக்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் 63.22 லட்சம் உறுப்பினர்கள் போலியாக சேர்ப்பு
சட்டப் பேரவையில் நேற்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதம் முடிந்ததும், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசியதாவது: கடந்த காலங்களில் முறையாக உறுப்பினர்களின் சேர்க்கையும், தேர்தலும் நடத்தப்படவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் சேர்க்கப்பட்டு தற்போது வரை உள்ள 1,90,26,152 உறுப்பினர்களில் 63,22,288 உறுப்பினர்கள் தகுதியற்றவர்களாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போது தேர்தல் ஆணையம் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஆதார், ரேசன் அட்டை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 59 சதவீதம் இணைப்புப்பணி நிறைவு பெற்றுள்ளது. எஞ்சிய 41 சதவீதம் இணைக்கும் பணி மேற்கொள்ள கால அவகாசம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி முறையாக தேர்தல் நடத்தப்படும்.

The post அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சிக்கு ஏதுவாக கூட்டுறவு அமைப்புகள் மூலம் ரூ1 லட்சம் கோடி கடன் உதவி: பேரவையில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,KR Periyakaruppan ,CHENNAI ,KR Periyagaruppan ,Tamil Nadu ,Tamil Nadu Legislative Assembly ,Dinakaran ,
× RELATED மலிவு விலையில் மருந்துகள் விற்பனை...