×

‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் வாலாஜாபாத் ஒன்றிய ஊராட்சிகளில் கலெக்டர் ஆய்வு

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றிய பகுதிகளில், ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேரில் ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார். அதன்படி, ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்படி காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், அவளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டு, சிகிச்சைக்கு வந்த நோயாளிகளிடம், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளை குறித்து கேட்டறிந்தார்.

மேலும், மருந்தகம் அறையினை பார்வையிட்டு, மருந்துகளின் இருப்பு நிலைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து, அவளூர் ஊராட்சி நெய்குப்பத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் புதிய குளம் வெட்டும் பணியினை ஆய்வு செய்து, பணியின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, வாலாஜாபாத் அருகே நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் பணிகளை பார்வையிட்டு, பணியின் விவரங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து, தேவரியம்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியினை பார்வையிட்டு, மாணவர்களின் கற்றல் திறனை கேட்டறிந்து, பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் வசதியை ஆய்வு செய்தார்.

இதனையடுத்து, வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் அட்டை சேர்க்கை மையம் மற்றும் வாலாஜாபாத்தில் உள்ள தனியார் உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவின் தரத்தினை கலெக்டர் ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து, வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் கலைச்செல்வி மோகன் கலந்துகொண்டு, உங்களை தேடி உங்கள் ஊரில் தீட்டத்தின் கீழ் நேற்று காலை முதல் பல்வேறு இடங்களில் முதல்நிலை அலுவலர்கள் மேற்கொண்ட ஆய்வு விவரங்களை கேட்டறிந்து, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையினை முன்னிட்டு, பல்வேறு வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, சென்னை – கன்னியாகுமரி தொழில்தட திட்ட பணிகளான மிலிட்டரி சாலையில் செவிலிமேடு முதல் ஓரிக்கை சந்திப்பு வரை சாலை, மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி மற்றும் ஓரிக்கை சாலை சந்திப்பு அம்பேத்கர் சிலை அருகே மேம்பாலம் அமைக்கும் பணியினை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து, உத்திரமேரூர் சாலையில் ஆசிரியர் காலனி அருகில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, ரயில்வே சாலையில் வடிகால்வாய் அமைக்கும் பணியினையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, கோட்டப் பொறியாளர் ஹேமலதா, உதவி கோட்டப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) பெரியண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

* உருமாறிய கிராமங்கள்
வாலாஜாபாத் ஒன்றியத்தில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று பல்வேறு ஊராட்சிகளில் ஆய்வு பணியினை மேற்கொண்டனர். அதற்காக முன்னெச்சரிக்கையாக ஊராட்சி முழுவதும் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தீவிர தூய்மை பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஊராட்சியில் உள்ள அடிப்படை வசதிகள், ஊராட்சிகளுக்கு தேவையான வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள், ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் தெரிவித்தனர். மேலும், ஊராட்சி முழுவதும் அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்தனர்.

The post ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் வாலாஜாபாத் ஒன்றிய ஊராட்சிகளில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Wallajahabad ,Union ,Walajahabad ,District Collector ,Kalachelvi Mohan ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,
× RELATED தொள்ளாழி ஊராட்சியில் சிதிலமடைந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி