×

வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா, குட்கா கடத்திய 3 பேர் கைது: 46 கிலோ குட்கா, 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள திருத்தணி பகுதி வழியாக தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, புகையிலை போதை பொருட்கள் கடத்தல் சம்பவங்களை தடுக்க மாவட்ட எஸ்.பி. சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் மேற்பார்வையில் போலீசார் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருத்தணி அருகே சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பொன்பாடி சோதனை சாவடியில் நேற்று திருத்தணி போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திர மாநிலம் நகரி பகுதியிலிருந்து திருத்தணி மார்கத்தில் கார் ஒன்று வந்தது.

அப்போது, காரை மடக்கிப்பிடித்து சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட சுமார் 41 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் ஆந்திராவிலிருந்து தமிழகத்தில் விற்பனைக்காக கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், கார் மற்றும் குட்கா, புகையிலை பறிமுதல் செய்தனர். விசாரணையில் திருத்தணி அருகே மத்தூர் காலனியைச் சேர்ந்த பாண்டியன் என்பவரின் மகன் அன்பு(29) என தெரிய வந்தது. அன்பு பி.ஏ பட்டதாரி. குடி போதைக்கு அடிமையாகி ஆந்திராவிலிருந்து காரில் குட்கா கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் அவ்வழியாக வந்த அரசு பேருந்தை நேற்று மடக்கி சோதனை செய்தனர். அப்போது ஒருவரிடம் 1.5 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னை சேர்ந்த கல்லூரி மாணவர் வெங்கடேஷ்(21) என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதேபோன்று, கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனை சாவடியில் சப் – இன்ஸ்பெக்டர் சிவா தலைமையில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாகனங்களை தொடர்ந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது. சந்தேகத்துக்கு இடமாக இருசக்கர வாகனத்துடன் முதியவர் ஒருவர் கைப்பையுடன் நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து நடத்திய விசாரணையில் தடை செய்யப்பட்ட 5 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது. இவர் சென்னையை சேர்ந்த உத்தமன்(75) என தெரியவந்தது. இதையடுத்து அவரை சிப்காட் காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா, குட்கா கடத்திய 3 பேர் கைது: 46 கிலோ குட்கா, 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Thiruthani ,District S.S. ,Tiruthani ,AP ,Thiruvallur district ,Siniwasa ,Perumal ,Trithani ,DSP Vignesh ,
× RELATED திருத்தணி ஒன்றியத்தில் ரூ.1.34 கோடி...