×

மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத்தில் முனைவர் பட்ட ஆய்வுகள் மேற்கொண்டு பட்டம் பெற விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத்தில் முனைவர் பட்ட ஆய்வுகள் மேற்கொண்டு பட்டம் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில்: உலகத் தமிழ்ச் சங்கம் 2015ம் ஆண்டில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கீழ் உயராய்வு நிறுவனமாக அங்கீகரிக்கப் பெற்று அப்போதைய தனிஅலுவலர் முனைவர் பசும்பொன் நெறியாளராகச் செயல்பெற்று, உலகத் தமிழ்ச் சங்கத்தில் ஆய்வு வளமையராகப் பணியாற்றும் ஜான்சிராணி ‘மலேசியப் பெண் படைப்பாளர்களின் சிறுகதைகளில் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

இதனையடுத்து, தற்போது இயக்குநராகப் பொறுப்பு வகித்துவரும் ஔவை அருள் தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வுக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும், துணைவேந்தர் ஆணையின்படியும், பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளின்படி முழு பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர்கள் 8 பேருக்கு நெறியாளராகச் செயலாற்றலாம் எனத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் 22.11.2023 அன்று அனுமதி அளித்துள்ளது. அத்துடன், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கீழ் உயராய்வு மையமாகச் செயல்பட உலகத் தமிழ்ச் சங்கம் அங்கீகரிக்கப் பெற்று, 09.01.2024 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் உலகத் தமிழ்ச் சங்கத்தில் 2024-2025ம் கல்வியாண்டு முதல் முனைவர் பட்ட ஆய்வுகளை முழு நேரமாகவும் பகுதி நேரமாகவும் மேற்கொள்ளலாம். முனைவர் பட்ட ஆய்வுக்கான பொருண்மைகள் தமிழ் இலக்கியம், அயல்நாட்டுத் தமிழ் இலக்கியம், ஒப்பிலக்கியம் சார்ந்த பொருண்மை குறித்து மேற்கொள்ளப்படலாம். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற வெளிநாடு வாழ் தமிழர்கள் நேரடியாக முனைவர் பட்ட ஆய்வுப்படிப்பில் சேரலாம். இந்திய கலாச்சார உறவுகளுக்கான சபையின் உதவித்தொகை, பிற நல்கை பெற்ற அயலக மாணவர்களும் தற்போது விண்ணப்பிக்கலாம். அயலக மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மாணவர்கள் ஓர் ஆண்டின் எந்த நேரத்திலும் இருக்கக்கூடிய ஒழிவிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு இதுவொரு பெரும்வாய்ப்பு. வெளிநாடு வாழ் தமிழ் மாணவர்கள் தங்கிப் பயில்வதற்கான நல்ல கட்டமைப்பைக் கொண்டு உலகத் தமிழ்ச் சங்கம் திகழ்கிறது. சேர்க்கை தொடர்பான விதிமுறைகள் மற்றும் கட்டணம் தொடர்பான விவரங்களை அறிய தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வலைத்தளத்தின் www.tamiluniversity.ac.in மூலம் அறியலாம். இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள விருப்பமுள்ளவர்கள் utsmdu.research@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ, 0452-2530799, 8110016911 என்ற தொலைபேசி வாயிலாகவோ, நேரடியாகவோ மதுரை, உலகத் தமிழ்ச் சங்க ஆய்வு வளமையர் ஜான்சிராணி அணுகி விவரங்களைப் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத்தில் முனைவர் பட்ட ஆய்வுகள் மேற்கொண்டு பட்டம் பெற விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,World Tamil Association ,Tamil Nadu Government ,Chennai ,Tamil University ,
× RELATED மதுரையில் போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்