×

பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்


சென்னை: பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்த பேரவையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது தளி ராமச்சந்திரன் (இந்திய கம்யூ) கேட்ட கேள்விகளுக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அளித்த பதில் வருமாறு: தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் 2024-25ம் ஆண்டின் மூலதன மானிய நிதித் திட்டத்தின்கீழ் புதிய அலுவலகம் கட்ட ₹99 லட்சத்தில் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் தொகையின் அடிப்படையில் பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்த முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

ஏற்கனவே உள்ள அளவுகோலின்படி மக்கள்தொகை மற்றும் வருமானம் நிர்ணயம் செய்திருந்தார்கள். பேரவையில் நாளை சட்டத்திருத்தம் கொண்டு வர இருக்கிறோம். புதிய சட்ட திருத்தம் மூலம் தேவையான இடத்தை நகராட்சியாகவோ, மாநகராட்சியாகவோ தரம் உயர்த்துவதற்கு அரசுக்கு அதிகாரம் தரப்படும். அந்த சட்டத்திருத்தம் அவையில் கொண்டு வந்தபிறகு உறுப்பினர் சொன்னதை உடனடியாக செய்ய இயலும். மக்கள்தொகை சரியாக இருக்குமானால் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த எந்த ஆட்சேபனையும் இல்லை. நீர்வளத்துறை அமைச்சர், பாசனமற்ற ஏரிகளை பராமரிப்பதற்கு மட்டும் அனுமதியை தருகிறேன் என்று பேரவையில் அறிவித்துள்ளார்.

அப்படி மனுதாரர் கூறும் தேவராஜன் ஏரி பாசனமற்று இருந்தால் அந்த ஏரியில் பூங்கா அமைத்து பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள பணிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

The post பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,KN Nehru ,CHENNAI ,Municipal Administration ,K.N. Nehru ,Thali Ramachandran ,Comm of India ,
× RELATED நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின்...