×

கோயில் நிதி முறைகேடு புகாரில் செயல் அலுவலர் மீதான ஒழுங்கு நடவடிக்கையை 6 மாதத்தில் முடிக்க வேண்டும்: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு


சென்னை: இந்து சமய அறநிலையத் துறையில் முதல்நிலை செயல்அலுவலராக பணியாற்றிய முத்துசாமி என்பவர் மீது கோயில் நிதியில் சுமார் ₹1.37 கோடி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இருந்த நிலையில் அதற்கு முன்பே 2020 ஆகஸ்ட் மாதம் அவர் விருப்ப ஓய்வு கேட்டு அறநிலையத்துறை ஆணையருக்கு கடிதம் எழுதினார். அந்த கோரிக்கையை அறநிலையத்துறை ஆணையர் நிராகரித்தார். மேலும், முத்துசாமி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து, தனது விருப்ப ஓய்வை ஏற்குமாறு அறநிலையத்துறைக்கு உத்தரவிடக்கோரி முத்துசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி, செயல் அலுவலரின் விருப்ப ஓய்வு மனுவை ஏற்குமாறு அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து அறநிலையத்துறை ஆணையர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அறநிலையத்துறை சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து ெசய்யததுடன் முத்துசாமி மீதான துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டனர்.

The post கோயில் நிதி முறைகேடு புகாரில் செயல் அலுவலர் மீதான ஒழுங்கு நடவடிக்கையை 6 மாதத்தில் முடிக்க வேண்டும்: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : EC ,endowments ,CHENNAI ,Muthuswamy ,Hindu Religious Endowment Department ,Dinakaran ,
× RELATED அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு...