×

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை: 100 அடியை நெருங்குகிறது பாபநாசம் அணை

நெல்லை: நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை தொடர்வதால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்து 100 அடியை நெருங்கி வருகிறது. அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்கள் தென்மேற்கு பருவமழைக் காலமாகும். தென் மேற்கு பருவமழை காலத்தில் கார் பருவ நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுவது வழக்கம். இதற்காக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனினும் இந்த ஆண்டு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு இல்லாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கன மழை பெய்துள்ளதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, பாபநாசம் அணையில் 91.30 அடியாக இருந்த நீர்மட்டம் மேலும் 6 அடி உயர்ந்து 97.15 அடியாக உயர்ந்தது. அணைக்கு விநாடிக்கு 4,912 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 804 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. சேர்வலாறு அணையில் 105.74 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 112.53 அடியாக அதிகரித்தது. பாபநாசம் அணைப்பகுதியில் 18 மிமீ, சேர்வலாறு அணையில் 5 மிமீ மழை பதிவாகியுள்ளது. மணிமுத்தாறு அணையில் 77.62 அடியாக இருந்த நீர்மட்டம் மேலும் ஒரு அடி உயர்ந்து 78.44 அடியானது. அணைக்கு விநாடிக்கு 1,033 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நேற்று விநாடிக்கு 575 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருதால் நீர்திறப்பு 400 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணைப்பகுதியில் 14.2 மிமீ மழை பதிவாகியுள்ளது. 52.50 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 50.50 அடியாக உயர்ந்தது. அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் அணைக்கு வரும் அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

அணைக்கு விநாடிக்கு 162 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் அணையில் இருந்து விநாடிக்கு 120 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைப்பகுதியில் 17 மிமீ மழை பதிவாகியுள்ளது. நம்பியாறு அணைப்பகதியில் 5 மிமீ மழை பெய்துள்ளது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நாலுமுக்கு எஸ்டேட்டில் 11.8 செமீ (118 மிமீ) மழை பதிவாகியுள்ளது. ஊத்து எஸ்டேட்டில் 90 மிமீ, காக்காச்சியில் 82 மிமீ மழை பெய்துள்ளது. பிற இடங்களை பொறுத்தவரை அம்பையில் 3 மிமீ, சேரன்மகாதேவியில் 6 மிமீ, நாங்குநேரியில் 3 மிமீ, பாளையங்கோட்டை, நெல்லையில் தலா 1.2 மிமீ, களக்காட்டில் 4.8 மிமீ, கன்னடியன் அணைக்கட்டில் 12.4 மிமீ, மூலக்கரைப்பட்டியில் 10 மிமீ மழை பதிவாகியுள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்துள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்கி வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் இன்று அல்லது நாளை 100 அடியை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை: 100 அடியை நெருங்குகிறது பாபநாசம் அணை appeared first on Dinakaran.

Tags : Western Ghats ,Papanasam dam ,Nellai ,Nellai district ,Tenkasi ,Dinakaran ,
× RELATED விவசாய தோட்டத்திற்குள் வரும் காட்டு யானையால் விவசாயிகள் அச்சம்!