×

அறவோன் சொல் கேள்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

பகுதி – 1

பிரம்ம முகூர்த்தத்தில் தசரதனுக்கு விழிப்பு வந்து விட்டது. மாளிகையின் உப்பரிகையில் இருந்து பார்க்கையில் நல்ல நல்ல சகுனங்கள் தோன்றின. பறவைகள் கூட்டமாக பறந்தன. அருகில் இருந்த வசிஷ்டர் ஆசிரமத்திலிருந்து வேத கோஷங்கள் கேட்டது. பக்கத்தில் இருக்கும் மண்டபத்திலிருந்து மங்கள இசை ஒலி காதில் விழுந்தது. மணி சத்தம் கேட்டது. வீதியைப் பார்க்கையில் பெண்கள் குடம் நிறைய நீரைச் சுமந்துச் சென்று கொண்டிருந்தார்கள். இன்று அயோத்திக்கும் என் மக்களுக்கும் மிக நல்ல நாளாக இருக்கப் போகிறது என்று தசரதன் நினைத்து மகிழ்ந்து போய் அரசவைக்குச் செல்ல தயாரானான்.

கொலு மண்டபத்தில் தசரதன் அரியணையில் வீற்றிருந்தான். வசிஷ்டர் முதலான அமைச்சர் பெருமக்களும் அங்கே அமர்ந்திருந்தார்கள்.ஒரு அரண்மனைக் காவலன் கட்டியம் கூறி வாழ்த்தொலி சொல்லிய பின், ‘‘தங்களைக் காண பிரம்மரிஷி விசுவாமித்திரர் வந்திருக்கிறார்’’ என்று கூறினான். அந்தச் சொல்லைக் கேட்டவுடன் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு என தன் அரியாசனத்தில் இருந்து எழுந்து வாசலை நோக்கி ஓடோடிச் சென்று விசுவாமித்திரரை வரவேற்கத் தயாரானான். விரைந்ததினால் அவன் மார்பில் அணிந்திருந்த ஆபரணமானது அவனுடைய முகத்தில் வந்து பட்டது. ஆபரணத்திலிருந்து வந்த ஒளியானது சூரிய ஒளியையே மிஞ்சும் அளவுக்கு மிளிர்ந்தது.

தசரதன் விசுவாமித்திர முனிவரை வணங்கி வரவேற்று ஆசனம் அளித்தார். வசிஷ்டர் முதலான அமைச்சர் பெருமக்களும் விசுவாமித்திரரை வணங்கினார்கள்.தசரதன் ‘‘விசுவாமித்திர மகரிஷியே! தாங்கள் வந்ததன் நோக்கம் என்ன என்று நான் அறியலாமா?’’ என்று வினவினார். ‘‘என்னைப் போன்ற முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கும், தேவர்களுக்கும் ஏதேனும் உதவி தேவைப்பட்டாலோ, அல்லது நாங்கள் துயரத்தில் இருந்தாலோ நாங்கள் தேடிச் செல்வது, முதலில் பிரம்மனை, அடுத்தபடியாக விஷ்ணுவிடம் செல்வோம், அல்லது சிவனிடம் செல்வோம் அல்லது இந்திரனிடம் செல்வோம், எங்கிலும் நடக்காத பட்சத்தில் எங்களுக்கு வேறு ஏது கதி! தசரதா! உன்னிடம் தானே நாங்கள் வரவேண்டும். நீதானே எங்களின் இறுதியான புகலிடம். அதுதான் நான் உன்னிடம் ஒரு உதவி வேண்டி வந்திருக்கிறேன்.’’

‘‘தாங்கள் கூறிய அத்துணை பாராட்டுகளுக்கும் நான் தகுதியுடையவனா எனக்குத் தெரியாது. ஆனால், உங்களைப் போன்ற பிரம்மரிஷிக்கு உதவுவதற்கு எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமானால் என்னை விட பேறு பெற்றவன் யாராக இருக்க முடியும்? தங்களுக்கு என்ன தேவையோ, அதை எனக்கு கட்டளையாக நீங்கள் இட வேண்டும். அதை உங்களுக்குச் சத்தியமாக செய்து கொடுப்பேன்.’’‘‘உன் மரியாதையை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். எங்களைப் போன்ற முனிவர்களின் ஆசி என்றும் உனக்கு உண்டு!’’

‘‘தசரதா! நான் சொல்வதை கவனமாகக் கேட்டுக்கொள். உலக நன்மைக்காக ஒரு வேள்வியை சித்தாஸ்ரமம் என்னும் இடத்தில் செய்யவிருக்கிறேன். அந்த வேள்விக்கு முன்னூறு வந்தால் ஒரு முனிவராக என்னால் சாபமிட்டு தவிர்க்க முடியும். வேள்வி முடிந்த பின் பின்னூறு ஏற்பட்டாலும் இந்த முனிவனால் அதைத் தவிர்க்க முடியும். ஆனால், வேள்வி நடக்கும் பொழுதே அதற்கு இடையூறு செய்பவர்களை என்னால் என்ன செய்ய முடியும்? மாரீசன் சுபாஹு என்ற இரண்டு ராட்சசர்கள் இடையூறு செய்ய யத்தனிக்கிறார்கள். ஒரு மனிதனுக்கு காமமும் குரோதமும் எந்த அளவு தீங்கு செய்யுமோ அதுபோல இந்த இருவரும் என் வேள்வியைத் தடுக்க தீங்கு செய்கிறார்கள்.’’இதைக் கேட்ட தசரதன், ‘‘மகரிஷியே! அவ்வளவுதானே. இதோ புறப்படுங்கள். என் படையை உங்களுடன் அனுப்புகிறேன். அவர்கள் அந்த இரண்டு ராட்சசர்களையும் துவம்சம் செய்து வேள்வியை காப்பார்கள்.’’ என்றார்.

“தசரதா! நான் கூற வந்ததை முழுமையாகக் கேள்!”‘‘மகரிஷியே! மன்னிக்க வேண்டும். நீங்கள் கூறுங்கள்.’’‘‘என் தவ வேள்வியைக் காக்க உன் புதல்வர்களில் மூத்தவன் கரிய நிற செம்மல், இராமனை அனுப்பினால் போதும்.’’‘‘இராமனா? அவன் சிறு பாலகன் இன்னமும் அவன் தாய் கோசலை அவனுக்கு பால் சோறு ஊட்டி விடுகிறாள் அவன் எதற்கு? மிகவும் பலம் பொருந்திய என் அமைச்சர் சுமந்திரனை உங்களுடன் அனுப்புகிறேன். அவன் கண்டிப்பாக உங்கள் வேள்வியைக்காப்பான்.’’ விசுவாமித்திரர் சற்று குரலை உயர்த்தி, ‘‘தேவையில்லை. எனக்கு இராமன்தான் வேண்டும். நீ என்னுடன் அனுப்பத் தயாராகு!’’

தசரதன் குரல் தழுதழுக்க, ‘‘வேண்டாம். வேண்டாம். வேறு யாரும் உங்களுடன் வர வேண்டாம். நானே உங்களுடன் வருகிறேன். எனக்கு எதிராக அந்த பிரம்மதேவனே வந்தாலும் கண்டிப்பாக வென்று உங்கள் தவ வேள்வியை காப்பேன்.’’‘‘தசரதா… நான் சொல்வது உன் காதில் விழவில்லையா? எனக்கு இராமன்தான் வேள்வியைக் காக்க வரவேண்டும். வேறு யாரும் தேவையில்லை.’’ விசுவாமித்திரர் குரல் உயர்த்தினார். வசிஷ்டர் உடனடியாக எழுந்து, ‘‘தசரதா கொஞ்சம் பொறுமையாக நான் சொல்வதைக் கேள். உன் அரியாசனத்தில் சென்று அமர். விசுவாமித்திரர் சொல்வது போலவே நடக்கட்டும். எல்லாம் சூரிய குலத்தின் நன்மைக்கே நடைபெறும்.’’

தசரதன் கண்முன்னே காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் தோன்றிய நல்ல சகுனங்கள் வந்து வந்து மறைந்தன. ‘இவ்வளவு நல்ல சகுனங்கள் நடந்தும் ஏன் இப்படி ஒன்று எனக்கு நேர்கிறது? புரியவில்லையே. விசுவாமித்திரர் எமனை விட கொடியவர் போல எனக்கு தோற்றம் அளிக்கிறாரே! இராமனை விட்டுப் பிரிய வேண்டும் என்கின்ற எண்ணமே தசரதருக்கு மிகுந்த அச்சத்தை அளித்தது.தசரதனுக்கு கண்ணிலாதான் பெற்றிழந்தான் எனத் துயரம் சூழ்ந்தது.

தசரதனுக்கு நீண்ட காலத்திற்குப் பிறகு இராமன் கிடைக்கப்பெற்று அவனை இழந்ததுபோல உணர்வும், அதேபோல் அன்று ஒரு நாள் கண்ணில்லாத அந்த தந்தை தன் மகனான சிரவண குமாரனை இழந்ததுபோல தனக்கும் அந்த நிலை வந்து விடுமோ என்ற அச்சத்திலும் தசரதன் இருந்தான்.வசிஷ்டர் விசுவாமித்திரரைச் சற்று இளைப்பாறச் செய்துவிட்டு தசரதன் அருகில் சென்றார் “தசரதா… நீ ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இராமனுக்கு சிறிது வயதே ஆனபோதும் அவன் இந்த அயோத்தியை மட்டுமல்ல, இந்த உலகத்தையே காக்கப் பிறந்தவன். அவனுக்கு எல்லா அனுபவங்களும் கிடைக்கப்பெற வேண்டும் அவனுக்கு நிறைய விஷயங்கள் கற்றுத் தரப்பட வேண்டும் அதற்கு விசுவாமித்திரர் மிகுந்த தகுதி வாய்ந்தவர்.’’

‘‘வசிஷ்டரே நீங்கள் எங்கள் குல குரு நீங்கள் எல்லா பாடங்களையும் இராமனுக்கு போதிக்க இயலாதா? என்னை விட்டு பிரிந்து சென்றுதான் அவன் பாடம் கற்க வேண்டுமா?’’
‘‘தசரதா! நான் பிறப்பால் ஒரு அந்தணன். எனக்குத் தெரிந்ததெல்லாம் தர்மசாஸ்திரம், வேத மந்திரங்கள் மற்றும் உங்களைப் போன்ற அரசருக்கு சொல்லுகின்ற ஆலோசனை அவ்வளவே! ஆனால், விசுவாமித்திரர் ஒரு சத்திரியர். அவர் ஒரு பேரரசராக இருந்தவர். அவர் சத்திரியராக இருந்து அந்தணராக மாறியவர் அதனால் அவருக்கு இரண்டு வகையிலும் எல்லா திறமைகளும் அவரிடம் உண்டு. போர் புரிதல் அரசு ஆளுதல் இவை போன்ற விஷயங்களில் அவருக்கு மிகுந்த ஞானம் உண்டு.

நம் இராமனுக்கும் அந்த அனுபவம் கிட்ட வேண்டுமெனில் கண்டிப்பாக நீ நம்பிக்கையுடன் அவருடன் அனுப்பத்தான் வேண்டும். சூரிய குலத்தின் குல குருவாக நான் வேண்டுவதும் விரும்புவதும் அதைத்தான். அதற்கும் மேலாக விசுவாமித்திரர் தன் மனதில் ஒரு பெரிய நல்ல நிகழ்வை இராமனுக்கு நிகழ்த்தி வைப்பதற்காக காத்திருக்கிறார். அதையும் நாம் உணர வேண்டும். அவருடைய ஆசி கண்டிப்பாக நமக்குத் தேவை. இதை உணர்ந்து கொண்டு சிரித்த முகத்துடன் இராமனையும் இலக்குவனையும் அவருடன் நீ அனுப்பி வைக்க வேண்டும்.’’

எவ்வளவுதான் வசிஷ்டர் இராமனையும் இலக்குவனையும் விசுவாமித்திரருடன் அனுப்பச் சொன்னபோதும் அவர் மனம் முழுமையாக இதற்கு சம்மதிக்கவில்லை. ஆனாலும் குலகுருவின் வார்த்தையை மீற இயலாமல் தன்னுடைய அரண்மனைக்குச் சென்று இராமனையும் இலக்குவனையும் விசுவாமித்திரர் உடன் அனுப்புவதற்கு தயார் செய்தார். விசுவாமித்திரர் அரண்மனைக்கு வந்தார். இரண்டு குழந்தைகளும் அவரிடம் ஆசி பெற்றனர். தசரதன் கண் கலங்கி விசுவாமித்திரரின் கைகளைப் பிடித்துக் கொண்டு, “என் உயிரை உங்களுடன் அனுப்புகிறேன் காத்து இரட்சிக்க வேண்டும்.” என்றார்.

“இந்தச் சூரிய குலத்திற்கு கண்டிப்பாக நன்மையே நடக்கும். இது சத்தியம்.” விசுவாமித்திரர் உடன் இருவரும் புறப்பட்டு சென்றார்கள். தசரதர் அங்கே நின்று கொண்டிருந்த கௌசல்யையிடம் உணர்ச்சி மேலோங்க “யாராவது தன் உயிர் பிரிவதை பார்த்திருக்கிறார்களா? அதை உணர முடியுமா? ஆனால் என்னைப் பொறுத்த வரையில் என் இன்னுயிர் பிரிவதை நான் பார்க்கிறேன்.” என்று கலங்கினார். கௌசல்யை அவரைத் தேற்றினார்.

அயோத்தி நகரில் இருந்து விசுவாமித்திரரும் இராமனும் இலக்குவனும் வீதியில் நடந்து செல்வதை வசிஷ்டர் முதலான பெரியவர்கள் வாழ்த்தி அனுப்பினார்கள். விசுவாமித்திரரும் இராமனும் இலக்குவனும் சற்று நேரத்தில் ஒரு பாலைவனம் போன்ற இடத்தினை அடைந்தார்கள். அதைக் கண்ட இராமன் “என்ன இது? இந்த இடம் இவ்வளவு வெப்பமாக இருக்கிறதே! அந்த அக்னி தேவனுக்கே நெஞ்சை எரிய வைக்கும் அளவிற்கு வெப்ப அனல் வீசுகிறதே. இதன் காரணம் என்ன? தர்மம் மிக்க ராஜ பரிபாலனம் இங்கே நடைபெறவில்லையா? எதனால் மருத நிலம் போன்று இருக்கவேண்டிய இடம் இப்படி பாலைவனம் போல் தோற்றமளிக்கிறது?” என்று கேட்டார்.

“இந்தச் சூரிய வெப்பம் உங்கள் இருவரையும் எந்த விதத்திலும் துன்புறுத்தல் ஆகாது. ஆகவே, நான் இப்பொழுது சொல்லிக் கொடுக்கின்ற ‘பல அதிபல’ மந்திரங்களை நீங்கள் உச்சரித்து உங்களை எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்” என்ற விசுவாமித்திரர் ‘பல அதிபல’ மந்திரங்களை சகோதரர்களுக்கு உபதேசித்தார்.“தங்களின் இந்த மந்திர உபதேசத்திற்கு மிக்க நன்றி. அதேசமயம் இங்குள்ள மற்ற உயிரினங்கள் இந்த வெப்பத்தினால் வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறதே இதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? இதன் காரணம் என்ன நான் அறிந்து கொள்ளலாமா?” என்று இராமன் கேட்டான்.

“இராமா! நீ அயோத்தியில் ராஜ பரிபாலனம் செய்வதற்கு முழுதும் தகுதி வாய்ந்தவன். அதனால்தான் நீ மற்ற பிரஜைகளைப் பற்றிக் கவலைக் கொள்கிறாய். இந்த நிலம் இப்படி வெப்பத்தணலாக தகிப்பதற்கு ஒரு காரணம் உள்ளது. அவள் ஒரு பெரிய ராட்சசி. அவளைப் பெண்ணென்று சொல்வதே பாவம். அவள் பெயர் தாடகை. இராமா நீ கேட்கலாம். எப்படி இந்த பெரிய நல்ல நிலத்தை தனி அரக்கி ஒருத்தியினால் அனல் கக்கும் பாலைவனமாக மாற்றி விட முடியும் என நினைக்கலாம். ஒரு மனிதனுக்கு நிறைய நல்ல குணங்கள் இருந்த போதிலும் பொறாமை என்கின்ற ஒரு தீய குணம் வந்தால் எப்படி நல்ல குணங்கள் எல்லாமும் பாழாகுமோ அதுபோலத்தான் இதுவும் நிகழ்ந்திருக்கிறது” என்ற விசுவாமித்திரர் தொடர்ந்தார்.

“அவளுடைய கொடுமையான குணத்தை பற்றி நான் என்ன சொல்ல? அவள் தன் காலில் அணிந்து கொண்டிருக்கின்ற கால் சதங்கையில் ஒவ்வொரு முத்திலும் ஒவ்வொரு மலையைக் கட்டி வைத்திருப்பாள். அது தவிரவும் தன்னுடைய இடுப்பில் ஒட்டியாணம் போன்ற ஒன்றைக் கட்டிக் கொண்டிருப்பாள். அதில் ஒவ்வொரு முடிச்சிலும் ஒவ்வொரு யானையைத் தொங்க விட்டிருக்கிறாள். இதிலிருந்து அவள் எத்தனை பெரிய பராக்கிரமம் உடையவள் என்பது உனக்குப் புரியும்.”

(தொடரும்)

தொகுப்பு: கோதண்டராமன்

The post அறவோன் சொல் கேள்! appeared first on Dinakaran.

Tags : Dasaratha ,Vasishtar Ashram ,
× RELATED தசரதன் தன் மக்களுக்கு கொடுத்த இரண்டு வாய்ப்புகள்