×

வங்கி கடனுதவிக்கும் ஏற்பாடு: புதிய தொழில் முனைவோராக பயிற்சி

அரியலூர், ஜூன் 27: அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழில் வணிகத் துறையின் கீழ் இயங்கும் அரியலூர் மாவட்ட தொழில் மையம் படித்த இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தி, தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்க ஒரு வழிகாட்டி மையமாக செயல்பட்டு வருகிறது. படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்கிட தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் திட்டமே “புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS)”ஆகும். இத்திட்டத்தின் கீழ் படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கவும், வங்கிகள் மூலம் 25 சதவிகிதம் மானியத்துடன் (ரூ.75லட்சத்திற்கு மிகாமல்) கூடிய கடன் உதவி பெறவும் மற்றும் 3 சதவிகிதம் பின்முனை வட்டி மானியம் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பொதுபிரிவினர் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 45 வயது வரையிலும், சிறப்பு பிரிவினர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள்) குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 55 வயது வரையிலும் இருக்கவேண்டும். விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தமிழ்நாட்டில் ஏதாவது ஒருபகுதியில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

திட்டத்தின் கீழ் பயன்பெற திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலும் இருத்தல் வேண்டும். திட்டத்தில் சுற்றுப்புற சூழலுக்கு இயைந்த அனைத்து லாபகரமான உற்பத்தி மற்றும் சேவை தொழில்களுக்கு கடன் வசதி செய்து தரப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் விண்ணப்பங்களை https://msmeonline.tn.gov.in/needs/index.php என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், வாலாஜா நகரம், அரியலூர் அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 04329-228555 மற்றும் 8925533925 மற்றும் 8925533926 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

The post வங்கி கடனுதவிக்கும் ஏற்பாடு: புதிய தொழில் முனைவோராக பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Ariyalur District ,Collector ,Annemarie Swarna ,Ariyalur District Industry Center ,Department of Industry and Commerce ,Dinakaran ,
× RELATED போதை தவிர் கல்வியால் நிமிர்...