×

தேசிய நெடுஞ்சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

புழல், ஜூன் 27: சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, புழல்-அம்பத்தூர் சந்திக்கும் சாலை, புழல் மத்திய சிறைச்சாலை-காந்தி பிரதான சாலை, சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை மற்றும் செங்குன்றம்-திருவள்ளூர் கூட்டு சாலையிலிருந்து செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையின் 2 பக்கங்களிலும் அதிகளவில் மாடுகள் சுற்றித் திரிகிறது.இதனால் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி படுகாயமடைகின்றனர். குறிப்பாக மேற்கண்ட பகுதிகளில் இரவு நேரத்தில் மின் விளக்குகள் எரியாததால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி சிரமப்பட்டு வருகின்றனர்.

இதை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களிடம் செல்போன் மற்றும் நகை பறிப்புகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மேற்கண்ட பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகளை சம்பந்தப்பட்ட தேசிய மாநில நெடுஞ்சாலை துறை மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, மாடுகளை சிறை பிடித்து மாட்டு உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். புழல், செங்குன்றம் சுற்றுவட்டார பகுதி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, புழல், செங்குன்றம், பாடியநல்லூர் சாலைகளிலும் தினசரி காலை, மாலை நேரங்களில் மாடுகள் சுற்றித் திரிவதால், சாலையில் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், மாடுகள் மீது மோதி விபத்தில் சிக்கி படுகாயம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து நாங்கள் பலமுறை மாதவரம் மண்டல அலுவலகத்திலும், பல்வேறு கிராம ஊராட்சிஅலுவலககங்கலும் புகார் கொடுக்கின்ற அன்றைய தினம் மட்டும் பெயரளவுக்கு மாடுகளை அப்புறப்படுத்துவதும், அபராதம் விதிப்பதும் நடந்து வருகிறது. எனினும் உரிமையாளர்கள் மீண்டும் மாடுகளை தெருவில் விடுகின்றனர். இதற்கு தீர்வாக, மாடுகளை பிடித்து ஏலம் விடுவது அல்லது உரிமையாளருக்கு ஒரு நாள் சிறை போன்ற தண்டனை வழங்க வேண்டும். அப்போது மட்டுமே உரிமையாளர்கள் மாடுகளை சாலையில் விடமாட்டார்கள். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post தேசிய நெடுஞ்சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Chennai-Kolkata ,Chennai-Kolkata National Highway ,Puzhal-Ambattur Junction Road ,Puzhal Central Jail-Gandhi Main Road ,
× RELATED வர்தா புயலின் போது சேதமடைந்த...