×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

காஞ்சிபுரம், ஜூன் 27: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், தென்மேற்கு பருவமழை-2024 முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், கடந்த ஆண்டுகளில் பெய்த பெருமழையின்போது, 3 மிக அதிகம் பாதிக்கப்படும் பகுதிகள், 21 அதிகம் பாதிக்கப்படும் பகுதிகள், 26 நடுத்தர மற்றும் 22 குறைவாக பாதிக்கப்படும் பகுதிகள் என மொத்தமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 72 பாதிக்கப்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின்போது பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்பு பணிகள் மேற்கொள்ளும் வகையில், 11 துறையை சார்ந்த அலுவலர்களை கொண்ட 21 மண்டல குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுக்களின் பணிகளை கண்காணிக்க 21 துணை ஆட்சியர் நிலையிலான குழு தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.
மேலும், துறை வாரியாக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து விரிவாக சம்மந்தப்பட்ட 11 துறைசார்ந்த அலுவலர்களிடம் விவாதிக்கப்பட்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் இடர்கள் ஏற்படின் மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் விரைவில் முடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து மழைநீர் வடிகால்கள், பாலங்கள் ஆகியவற்றை தூர்வாரும் பணி மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள பாலங்கள் மற்றும் சிறு பாலங்கள் சுத்தம் செய்யும் பணி, மழைநீர் வடிகால்கள் அமைத்தல், விரிவுப்படுத்துதல், உபரிநீர் கால்வாய்கள், நீர்வரத்து கால்வாய்கள் ஆகியவற்றினை தூர் வாருதல் போன்ற பணிகள் மேற்கொள்ள பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் ஆகிய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள் துறை மற்றும் பல்வேறு துறைகளின் மூலமாக மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க போதிய உபகரணங்கள் மற்றும் உயிர் காக்கும் கருவிகளை இருப்பு வைக்க அறிவுரை வழங்கப்பட்டது. பாம்பு பிடிப்போர், நீச்சல் வீரர்கள், முதலுதவி வீரர்கள், தேசிய மாணவர் படை மற்றும் மாணவர்கள் நாட்டு நலப்பணி திட்ட தன்னார்வலர்கள், தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் ஆகியோர்களையும் தயார் நிலையில் வைத்திடவும் அறிவுறுத்தினார்.மேலும், தென்மேற்கு பருவமழையினை எதிர்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் (ம) பொதுமக்கள் ஆகியோர் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர் செந்தில் முருகன், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

n காஞ்சிபுரம் மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழையின்போது பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்பு பணிகள் மேற்கொள்ளும் வகையில், 11 துறையை சார்ந்த அலுவலர்களை கொண்ட 21 மண்டல குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுக்களின் பணிகளை கண்காணிக்க 21 துணை ஆட்சியர் நிலையிலான குழு தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.
n பாம்பு பிடிப்போர், நீச்சல் வீரர்கள், முதலுதவி வீரர்கள், தேசிய மாணவர் படை மற்றும் மாணவர்கள், நாட்டு நலப்பணி திட்ட தன்னார்வலர்கள், தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் ஆகியோர்களையும் தயார் நிலையில் வைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
n தென்மேற்கு பருவமழையினை எதிர்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் (ம) பொதுமக்கள் ஆகியோர் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் கேட்டுக்கொண்டார்.

The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram District ,South West ,Kanchipuram ,District Collector ,Office Complex ,People's Relations Center ,South West Monsoon ,
× RELATED போதைப்பொருள் விற்பனை செய்தால்...