×

திருப்போரூர், மறைமலை நகர் பகுதிகளில் லாரி சக்கரத்தில் சிக்கி மாணவன் உட்பட 3 பேர் பலி

செங்கல்பட்டு, ஜூன் 27: மறைமலை நகர் மற்றும் திருப்போரூர் பகுதிகளில் நடந்த விபத்ததுகளில் லாரி சக்கரத்தில் சிக்கி மாணவன் உட்பட 3 பேர் பரிதாபமாக பலியாகினர். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அருகே பாவேந்தர் சாலையில் நேற்று முன்தினம் மாலை காட்டாங்கொளத்தூர் ஐஸ்வர்யம் நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான கீர்த்திவாசன் (54) என்பவர் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். எப்போதுமே பரபரப்பாக காணப்படும் மறைமலைநகர் பாவேந்தர் சாலையில் அதிவேகமாக வந்த லாரி ஒன்று, முன்னாள் சென்று கொண்டிருந்த கீர்த்திவாசன் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் இருந்து கீழே விழுந்த கீர்த்திவாசன் மீது லாரியின் டயர் ஏறி இறங்கியது. இந்த கோர விபத்தில் கீர்த்திவாசன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் கீர்த்தி வாசன் மீது லாரி ஏறி இறங்கும் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்போரூர் ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவர் லால் பாஷா (27). இவர், கேளம்பாக்கத்தில் வாடகை வீட்டில் தங்கியபடி படூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்து வந்தார். சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த நிக்காரா ஜனா என்பவரின் மகன் ஹரீஷ் ஜனா (19) என்பவர் அந்த பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பிஇ கணினி அறிவியல் படித்து வந்தார்.

இருவரும் நட்பாக பழகி வந்ததால் நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்ததும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் கடற்கரைக்கு சென்று ஜாலியாக இருந்து விட்டு ஓட்டலுக்கு சென்று உணவு அருந்தினர். பின்னர், ஹரீஷ் ஜனாவின் மோட்டார் சைக்கிளில் நள்ளிரவு 12 மணிக்கு கேளம்பாக்கத்தில் இருந்த லால்பாஷாவின் அறைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது, கோவளம் மற்றும் கேளம்பாக்கம் இடையே பக்கிங்காம் கால்வாய் அருகே வந்தபோது, எதிரே வந்த கார் ஒன்றின் கதவு திடீரென திறக்கப்பட்டதால், இவர்கள் இருவரும் வந்த மோட்டார் சைக்கிள் அதன் மீது மோதியதில் நிலை குலைந்து கீழே விழுந்தனர். அப்போது, காருக்கு பின்னால் வந்த லாரியின் சக்கரம் அவர்கள் மீது ஏறியதில், உடல் நசுங்கி 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து, தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார், 2 பேரின் உடல்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காரை ஓட்டிவந்த தியாகராஜன் (30), லாரி டிரைவர் இளங்கோ (41) ஆகிய 2 பேரையும் பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் கைது செய்தனர்.

The post திருப்போரூர், மறைமலை நகர் பகுதிகளில் லாரி சக்கரத்தில் சிக்கி மாணவன் உட்பட 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Thiruporur ,Karamalai Nagar ,Chengalpattu ,Thirumalai Nagar ,Tiruporur ,Kattangolathur ,Aishwaryam ,Bavendar road ,Chiramalainagar, Chengalpattu district ,Thiruporur, Chiramalai Nagar ,Dinakaran ,
× RELATED பொதுமக்களுடைய நீண்டநாள் கோரிக்கையை...