×

கர்ப்பிணிக்கு தவறான சிகிச்சை அளித்ததாக புகார் இணை இயக்குனர் விசாரணை ஆரணி அரசு மருத்துவமனையில்

ஆரணி, ஜூன் 27: ஆரணி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின்பேரில் மருத்துவ இணை இயக்குநர் பாலச்சந்தர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த தெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ராம்பிரகாஷ்(35). சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி(24). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு 25.05.2023ம் அன்று பிரசவ வலி ஏற்பட்டதால் ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது டாக்டர்கள், ஜெயந்திக்கு சுக பிரசவத்தில் குழந்தை பெற்றெடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர். இதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டதால், ஜெயந்திக்கு அறுவை சிகிச்சை செய்ததில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஆனால், அதன்பிறகு ஜெயந்தி மயக்கம் ஏற்பட்டு சுயநினைவை இழந்து மோசமான நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து அவரது குடும்பத்தாருக்கு முறையாக தகவல் தெரிவிக்காமல் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு டாக்டர்கள், சிசிச்சை அளிப்பதற்காக ஜெயந்தியை பரிசோதனை செய்தபோது அவரது பின்பக்க தலை, மூக்கு, கால் மற்றும் உடல் பகுதிகளில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. மேலும், ஜெயந்தி சுயநினைவின்றி இருந்ததால் மருத்துவமனையில் 57 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அவரது பெற்றோர் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திலும், மாநில சுகாதாரத்துறை அலுவலகத்திலும் புகார் அளித்தனர். அதில், ஆரணி அரசு மருத்துவமனையில் எங்களது மகள் ஜெயந்திக்கு அதிகளவு மயக்க மருந்து மற்றும் தவறான சிகிச்சை அளித்ததால்தான் கடந்த ஒரு வருடமாக சுயநினைவின்றி இருக்கிறார். தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். அதன்பேரில், வேலூர் மருத்துவ இணை இயக்குநர் பாலச்சந்தர் தலைமையில் மருத்துவக்குழுவினர் நேற்று ஆரணி அரசு மருத்துவமனைக்கு வந்து ஜெயந்திக்கு பிரசவ வார்டில் சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் அவரது பெற்றோரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post கர்ப்பிணிக்கு தவறான சிகிச்சை அளித்ததாக புகார் இணை இயக்குனர் விசாரணை ஆரணி அரசு மருத்துவமனையில் appeared first on Dinakaran.

Tags : Arani Government Hospital ,Arani ,Medical Associate Director ,Balachander ,Ramprakash ,Tellur village ,Tiruvannamalai district.… ,Dinakaran ,
× RELATED ஆரணி பேரூராட்சி பஜார் பகுதியில்...