×

நாகர்கோவில் மாநகராட்சியுடன் இணைந்த பகுதிகளில் ₹60.46 கோடியில் புத்தன் அணை குடிநீர் திட்டம் விரைவில் பணிகள் தொடங்குகிறது

நாகர்கோவில், ஜூன்27: நாகர்கோவில் மாநகராட்சியுடன் புதிதாக இணைந்த பகுதிகளில் ரூ.60 கோடியில் புத்தன் அணை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்கான நிர்வாக அனுமதி கிடைத்து உள்ளதை தொடர்ந்து பணிகள் விரைவில் தொடங்குகின்றன. நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.296 கோடியில் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்துக்காக குலசேகரம் அருகே உள்ள புத்தன்அணையில் இருந்து 31.85 கிலோ மீட்டர் தூரத்திற்கு ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டு, நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

இந்த திட்டத்துக்காக கிருஷ்ணன்கோவிலில் ஏற்கனவே உள்ள சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் புதிதாக சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. மாநகர பகுதிக்குள் 475 கிலோமீட்டர் தூரத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட்டு, வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. புத்தன் அணை குடிநீர் திட்டப்பணிக்காக ஏற்கனவே உள்ள 12 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் தவிர, புதிதாக 11 மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு , தண்ணீர் வினியோகம் செய்தும் சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனையும் திருப்திகரமாக உள்ளது. கடந்த கோடை காலத்தில் முக்கடல் அணை வறண்ட போது, புத்தன் அணையில் இருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீர் தான், வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது. புத்தன் அணை குடிநீர் திட்டம் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன.

விரைவில், திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களின் செயல்பாட்டுக்கு திறந்து வைப்பார் என கூறப்படுகிறது. இந்த திட்டத்துக்காக சுமார் 72 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்புகள் கொடுக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நாகர்கோவில் மாநகராட்சியுடன் இணைந்த ஆளூர், தெங்கம்புதூர் பேரூராட்சி பகுதிகள் தற்போது நாகர்கோவில் மாநகராட்சியில் 1,2,3 மற்றும் 51, 52, 53 ஆகிய 6 வார்டுகளாக உள்ளன. இந்த 6 வார்டுகளுக்கும் 24×7 திட்டத்தின் கீழ் 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும் வகையில் ரூ.60 கோடியில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என மாநகராட்சி மேயர் மகேஷ் அறிவித்து இருந்தார்.

தற்போது புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகளுக்காக பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் இருந்தே இணைப்பு கொடுக்கப்பட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த திட்டத்துக்கான அனுமதி கிடைத்துள்ளது. ரூ.60.46 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி நிதி உதவியுடன் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ், இப்பணி மேற்ெகாள்ளப்பட உள்ளது. இதற்கான நிர்வாக அனுமதி பெறப்பட்டு, நகராட்சி நிர்வாக தலைமை பொறியாளர் (சென்னை) அலுவலக செயல்முறை ஆணையுடன் கூடிய தொழில் நுட்ப அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கான ஒன்றிய அரசின் நிதி ரூ.20.15 கோடி ஆகும். மாநில நிதி ரூ.18.14 கோடியும், தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியம் ரூ.13.20 கோடியும், திட்ட நிலைத்தன்மை மானிய நிதி ரூ.13.19 கோடியும் ஆகும். தற்போது வேலைக்கான அனுமதி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் ஒப்பந்தப்புள்ளி பரிசீலிக்கப்பட்டு, ஈரோடு நிறுவனம் இந்த பணிகளை செய்ய உள்ளது. இன்று (27ம்தேதி) நடக்க உள்ள மாநகராட்சி கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கும் என தெரிகிறது.

3 மாதங்களுக்கு பிறகு இன்று மாநகராட்சி கூட்டம்
நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், கடந்த 3 மாதங்களாக மாநகராட்சி கூட்டம் நடக்க வில்லை. மேயர் , துணை மேயர் உள்ளிட்ட யாரும் மாநகராட்சி அலுவலகத்துக்கும் வர வில்லை. தற்போது நடத்தை விதிமுறைகள் எல்லாம் முடிவடைந்து உள்ளன. மீண்டும் அரசின் திட்ட பணிகள், ஆய்வு கூட்டங்கள் நடந்து வருகின்றன.அதன்படி இன்று (27ம்தேதி) நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம், மேயர் மகேஷ் தலைமையில் காலை 11 மணிக்கு மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. பல்வேறு தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட உள்ளன. ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, கவுன்சிலர்கள் கலந்து கொள்கிறார்கள்.

The post நாகர்கோவில் மாநகராட்சியுடன் இணைந்த பகுதிகளில் ₹60.46 கோடியில் புத்தன் அணை குடிநீர் திட்டம் விரைவில் பணிகள் தொடங்குகிறது appeared first on Dinakaran.

Tags : Nagercoil Corporation ,Nagercoil ,Budhan Dam ,Dinakaran ,
× RELATED வணிக நிறுவனங்களில் குப்பை எடுக்க பணம்...