×

ராமநாதபுரம் அருகே கழிவுநீர் குழாய் பதிக்க எதிர்ப்பு

ராமநாதபுரம், ஜூன் 27: ராமநாதபுரம் நகராட்சி பாதாளச்சாக்கடை கழிவுநீர் குழாய் பதித்த ஊழியர்கள், இயந்திரங்களை மாடக்கொட்டான் கிராம மக்கள் சிறைபிடித்து, தர்ணாவில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் நகராட்சியில் கடந்த 2013ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் அமலுக்கு வந்தது. இதன் கழிவுநீர் குழாய்கள் பதித்து 6 கி.மீ தொலைவிலுள்ள மாடக்கொட்டான் கிராம பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது பழுதடைந்த குழாய்களுக்கு பதிலாக புதிய குழாய்கள் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நகராட்சி பகுதியிலிருந்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வரை புதிய குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று மாடக்கொட்டான் ரமலான் நகர் பகுதியில் குழாய் பதிக்கச் சென்ற தொழிலாளர்கள், இயந்திரங்களை அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தி மாடக்கொட்டான், ரமலான் நகர் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் சிறைபிடித்தனர்.

பின்னர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி தலைவர் கார்மேகம் மற்றும் நகராட்சி அலுவலர்கள் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் ஏற்கனவே கூறியபடி நகராட்சி நிர்வாகம் கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும். அதுவரை புதிய குழாய் பதிக்கக் கூடாது எனக் கூறினர். நகராட்சி அதிகாரிகளும் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.  போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றாமல், அப்படியே கழிவுநீரை வெளியேற்றுவதால் இப்பகுதி நிலங்கள், காடுகள், ஆற்றில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீரை குடித்து பசுமாடுகள் இறந்துள்ளன. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே முறைப்படி கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும் என தெரிவித்தனர்.

The post ராமநாதபுரம் அருகே கழிவுநீர் குழாய் பதிக்க எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Ramanathapuram Municipal Underground Sewer Pipeline ,Madakkotan ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே...