×

மேட்டுப்பாளையம் ஜமாபந்தியில் 113 பயனாளிகளுக்கு கலெக்டர் உடனடி சான்றிதழ் வழங்கினார்

மேட்டுப்பாளையம், ஜூன் 27: மேட்டுப்பாளையத்தில் கடந்த 4 நாட்களாக நடந்த ஜமாபந்தியின் போது பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில் 113 மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை எடுத்து கலெக்டர் உடனடி சான்றிதழ்கள் வழங்கினார். மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 20,21,25,26ம் தேதிகளில் வட்ட அளவில் உள்ள 17 ஊராட்சிகள், இரு நகராட்சிகள், ஒரு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை மனுக்களாக அதிகாரிகளிடம் வழங்கினர். நான்காம் நாளான நேற்று கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி பொதுமக்களிடம் இருந்து 556 மனுக்களை பெற்றுக்கொண்டார். அதன்படி கடந்த 20ம் தேதி 239, 21ம் தேதி 587, 25ம் தேதி 1153, 26ம் தேதி 556 என மொத்தமாக 2535 மனுக்கள் பெறப்பட்டன. இதில் கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி 113 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, குடும்ப அட்டை, நத்தம் பட்டா மாறுதல், டவுன் பட்டா மாறுதல், முதல் பட்டதாரி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை நேற்று வழங்கினார்.

நிகழ்ச்சியின் போது மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் சந்திரன்,சமூக பாதுகாப்புத்திட்ட தனி வட்டாட்சியர் ஜெயபால்,ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை மகேந்திரன், மேட்டுப்பாளையம் நகர்மன்ற தலைவர் மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி, நகராட்சி கமிஷனர்கள் மனோகரன், அமுதா,ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரஸ் குமார், ரங்கசாமி, ராஜேஸ்வரி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜமாபந்தியில் பெள்ளேபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பிரஸ்குமார் கலெக்டரிடம் அளித்த மனுவில்: பெள்ளேபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் அருந்ததியின மக்கள் 120 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2011 முதல் இதுவரை வீட்டுமனை பட்டாக்களுக்கு உரிய நிலத்தை அளவீடு செய்து கொடுக்கவில்லை. எனவே,அந்த நிலங்களை அளவீடு செய்து கொடுக்க வேண்டும் அல்லது அப்பகுதி மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். மேலும், ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தமாக 14 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். எனவே,எங்களது ஊராட்சிக்கு 12 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.இதனால் அடிக்கடி தகராறு,விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.எனவே,அதனை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இதே போல் இலுப்ப நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கசாமி அளித்த மனுவில் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள மயானத்திற்கு செல்ல போதுமான சாலை வசதி இல்லை.எனவே,நிலத்தை சர்வே செய்து உரிய பாதை அமைத்து தர வேண்டும். மேலும்,அப்பகுதியில் உள்ள 40 சென்ட் நிலத்தில் சமத்துவ மயானம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சிக் குட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு 2.75 ஏக்கர் பரப்பளவில் உள்ள அரசு நிலத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் எனவும் அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post மேட்டுப்பாளையம் ஜமாபந்தியில் 113 பயனாளிகளுக்கு கலெக்டர் உடனடி சான்றிதழ் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Mettupalayam Jamabandhi ,Mettupalayam ,Mettupalayam District ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையத்தில் திறனறி தேர்வு பயிற்சி துவக்கம்