×

தேர்தல் செலவுக்காக ரூ11 லட்சம் வாங்கிய பாஜ நிர்வாகி மிரட்டல்: எஸ்பியிடம் பட்டதாரி வாலிபர் புகார்


வேலூர்: வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று எஸ்.பி. மணிவண்ணன் தலைமையில் குறைதீர் முகாம் நடந்தது. இதில் காட்பாடி தாலுகா பள்ளிக்குப்பம் ஈசன் ஓடை பகுதியைச் சேர்ந்த நவீன்குமார்(23) என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது தாய் மாமா மூலமாக பெரியபுதூர் பகுதியைச் சேர்ந்த பாஜ நிர்வாகி குமாருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர், காண்ட்ராக்ட் ஒர்க் எடுத்து வேலை செய்யலாம் என ஆசைவார்த்தை கூறினார். பின்னர் அவர் கூறியதை நம்பி, அவருடன் சுயதொழில் ஆரம்பிக்க ஒப்புக்கொண்டேன். அப்போது அவர் அவசரமாக தேர்தல் செலவுக்காக கொடுக்க வேண்டும் என ₹5 லட்சம் கேட்டார்.

நான் ₹5 லட்சம் அனுப்பினேன். தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக மொத்தம் ₹11 லட்சத்து 96 ஆயிரத்து 500 கொடுத்துள்ளேன். பணத்தை கேட்டபோது தான் பாஜவில் உள்ளதாகவும், காவல்துறை அதிகாரிகளுக்கு பழக்கம் என்றும், தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறி மிரட்டி வருகிறார். நான் மாதம் ₹16,000 வட்டி கட்டி வருகிறேன். எனவே எனது பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் பெயரை சொல்லி போலீஸ்காரர் ரூ16 லட்சம் மோசடி
வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று எஸ்பி மணிவண்ணனிடம் வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த மஸ்தான் என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது நண்பர் மூலம் கடந்த 2015ல் காட்பாடி பகுதியைச் சேர்ந்த சத்யமூர்த்தி எனக்கு அறிமுகமானார். அவர் சென்னை தலைமை செயலகத்தில் அப்போதைய முதல்வரின் பாதுகாப்பு பிரிவில் காவலராக பணிபுரிந்து வருவதாகவும், அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் முதன்மை செயலாளர்கள் என்று பல உயரதிகாரிகள் நன்றாக தெரியும், அவர்கள் மூலம் பலருக்கு அரசு வேலைகளை வாங்கிக் கொடுத்துள்ளேன் என்று கூறினார்.

மேலும் 2015 ஜூன் மாதம் பள்ளிக்கல்வித்துறையில் ஆய்வக உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி ₹10 லட்சமும், மற்றவர்களுக்கு இதர துறைகளான மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறை உட்பட பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி ₹6 லட்சமும் பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டார். எனவே சத்யமூர்த்தியிடம் ₹16 லட்சத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

The post தேர்தல் செலவுக்காக ரூ11 லட்சம் வாங்கிய பாஜ நிர்வாகி மிரட்டல்: எஸ்பியிடம் பட்டதாரி வாலிபர் புகார் appeared first on Dinakaran.

Tags : BJP ,SP Vellore ,Vellore SP ,Manivannan ,Naveen Kumar ,Esan Odai ,Gadbadi Taluk ,Pallikuppam ,Periyaputur ,
× RELATED தேர்தல் செலவுக்காக ₹11 லட்சம் பெற்று...