×

திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமை குழு அனுப்பிய நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்த மேல் முறையீடு வழக்கை வாபஸ் பெறுவதா? அரசு தரப்பு கருத்து தெரிவிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அதிமுக ஆட்சியில், 2017ம் ஆண்டு சட்டப் பேரவையில் காட்டுவதற்காக குட்கா கொண்டு சென்றதாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக சட்டப்பேரவை உரிமைக் குழு, உரிமை மீறல் நோட்டீசை அனுப்பியது. இந்த நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாகக் கூறி, அதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் உரிமை மீறல் இருப்பதாகக் கருதினால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து, உரிமைக் குழு, திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இரண்டாவது நோட்டீசையும் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து உரிமைக் குழு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குகள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம்,் குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மேல்முறையீட்டு வழக்கை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கோரப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், முந்தைய ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கை திரும்ப பெற கோருவது அரசியல் சட்டத்திற்கு எதிரானது மட்டுமல்லாமல், நியாயமற்றதும் கூட. இந்த மேல்முறையீட்டு வழக்கை திரும்ப பெற அனுமதித்தால் மக்கள் என்ன நினைப்பார்கள்? இதே போன்ற கோரிக்கை அனைவரும் எழுப்பக்கூடும். இதே போல முந்தைய ஆட்சியில் தொழிலாளர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை திரும்பப் பெறுவீர்களா?. இந்த நடைமுறை சரியானது அல்ல. நீதிமன்றமும் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். எனவே, இந்த வழக்கு தொடர்பாக அரசின் கருத்தை அறிந்து அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 2ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமை குழு அனுப்பிய நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்த மேல் முறையீடு வழக்கை வாபஸ் பெறுவதா? அரசு தரப்பு கருத்து தெரிவிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : DMK MLAs ,ICourt ,CHENNAI ,AIADMK ,Legislative Assembly Rights Committee ,MK Stalin ,Gutka ,Legislative Assembly ,Dinakaran ,
× RELATED பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்...