×

இளம்பெண் பலாத்காரம்: ராணுவ வீரர் அதிரடி கைது: காவல் நிலையத்தில் இருதரப்பு மோதல்

 

உசிலம்பட்டி: இளம்பெண்ணை திருமண ஆசைகாட்டி பலாத்காரம் செய்த வழக்கில் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர். இரு தரப்பினரும் காவல் நிலையம் முன் தாக்குதலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன் (30). ராணுவ வீரரான இவர், ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றி வருகிறார். இவர் 26 வயது இளம்பெண்ணுடன் பழகி வந்ததாக தெரிகிறது. இதில் பெண் கர்ப்பமான நிலையில், அவரை மிரட்டி கருக்கலைப்பு செய்ய வைத்த ராமன், பின்னர் திருமணம் செய்ய மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஜனவரியில் இளம்பெண் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் போலீசார், ராமன் மீது வழக்குப்பதிவு செய்தனர். விசாரணைக்காக நேற்று உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராமன் ஆஜரானார். அப்போது அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டாலும், பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார், ராமனை கைது செய்து நீதிமன்றம் அழைத்து சென்றனர். அப்போது, இளம்பெண் குடும்பத்தினரை பார்த்து ராமன் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனால் இருபிரிவினரும், காவல் நிலையம் முன்பாக சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை கட்டுப்படுத்தி அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர் ராமனை, உசிலம்பட்டி நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.

The post இளம்பெண் பலாத்காரம்: ராணுவ வீரர் அதிரடி கைது: காவல் நிலையத்தில் இருதரப்பு மோதல் appeared first on Dinakaran.

Tags : Usilampatti ,Kodikulam ,Usilambatti, Madurai district ,Dinakaran ,
× RELATED அலுவலக தாக்குதலை கண்டித்து கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்