×

இந்து அறநிலையத்துறையில் 108 அறிவிப்புகள் 17 ஆயிரம் கோயில்களுக்கு வைப்புத்தொகை ரூ.2.5 லட்சமாக உயர்வு: சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் ஒரு காலை பூஜை திட்டத்தில் உள்ள 17 ஆயிரம் கோயில்களின் வைப்புத்தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்படும். மேலும் ஆயிரம் கோயில்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த கோயில்களில் அர்ச்சகர்களுக்கு வழங்கப்படும் உதவித்துறை ரூ.1000, மேலும் புதிதாக சேர்க்கப்படும் ஆயிரம் கோயில்களுக்கும் வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று மாலை இந்து அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் முடிந்தது. இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு 108 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

முக்கிய அறிவிப்புகளின் விவரம்:
* ஒருகால பூஜைத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 17 ஆயிரம் கோயில்களின் வைப்புத் தொகை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். இவ்வாண்டு 1000 நிதி வசதியற்ற கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்கான மொத்த செலவினம் ரூ.110 கோடி வழங்கப்படும். ஏற்கனவே, 17 ஆயிரம் கோயில் அர்ச்சகர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத உதவித் தொகை ரூ.1000, இவ்வாண்டு கூடுதலாக சேர்க்கப்படும் 1000 கோயில்களின் அர்ச்சகர்களுக்கும் வழங்கப்படும்.
* ஒருகால பூஜைத் திட்ட கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களின் பிள்ளைகள் நலன் கருதி, இவ்வாண்டு 500 மாணவர்களுக்கு மேற்படிப்பிற்காக தலா ரூ.10 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
* சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் யானை வாகனத்திற்கு வெள்ளித்தகடு போர்த்தும் பணி மேற்கொள்ளப்படும். சென்னை, புலியூர், பரத்வாஜேசுவரர் கோவிலுக்கு ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளித்தகடு போர்த்திய புதிய அதிகார நந்தி வாகனம் செய்யப்படும்.
* சென்னை, வடபழனி, வடபழனி ஆண்டவர் கோயில் மூலவர் சன்னதி மரக்கதவில் வெள்ளித் தகடு போர்த்தும் திருப்பணி ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
* சென்னை, திருவான்மியூர், பாம்பன் குமரகுருதாசர் கோவிலில் தற்போது அன்னதானத் திட்டத்தின் கீழ் திங்கள், புதன், சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நாளொன்றுக்கு 300 பக்தர்களுக்கு வழங்கப்படுவதை 500 பக்தர்களுக்கும், செவ்வாய், வியாழன், வெள்ளி, பவுர்ணமி, கிருத்திகை மற்றும் சஷ்டி தினங்களில் நாளொன்றுக்கு 500 பக்தர்களுக்கு வழங்கப்படுவதை 800 பக்தர்களுக்கும், மயூர வாகனசேவை, சிவராத்திரி, மகாசிவராத்திரி, குருபூஜை, கந்தசஷ்டி தினங்களில் 800 பக்தர்களுக்கு வழங்கப்படுவதை 1000 பக்தர்களுக்கும் விரிவுபடுத்தி அன்னதானம் வழங்கப்படும்.
* சென்னை, வியாசர்பாடி, இரவீசுவரர் கோயில், கந்தகோட்டம், முத்துக்குமாரசுவாமி கோயில், கொளத்தூர், சோமநாதசுவாமி கோயில் மற்றும் திருவண்ணாமலை சோமாசிபாடி, பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகிய 4 கோயில்களில் தற்போது 50 பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அன்னதானத் திட்டத்தினை விரிவுபடுத்தி நாள் ஒன்றுக்கு 100 பக்தர்களுக்கும், திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள குபேரலிங்கம் கோவிலில் தற்போது 25 பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அன்னதானத் திட்டத்தினை விரிவுபடுத்தி நாள் ஒன்றுக்கு 50 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
* தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுக்கு, இவ்வாண்டு மேலும் 1000 பக்தர்கள் அறுபடை வீடுகளுக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத்தொகை ரூ.1.58 கோடி அரசு நிதியாக வழங்கப்படும்.
* ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவத் கோயில்களுக்கும் வயது மூப்பின் காரணமாகவும், பொருளாதார வசதியின்மை காரணமாகவும், இறை தரிசனம் கிடைக்க இயலாத 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட, தலா 1000 பக்தர்கள் அழைத்து செல்லப்படுவர். இதற்கான செலவினத் தொகை ரூ.50 லட்சம் அரசு நிதியாக வழங்கப்படும்.
* திருவள்ளூர், திருவாலங்காடு, ஆலாங்காட்டுஈசுவரர் கோவிலில் 63 நாயன்மார்களில் ஒருவரும் சமய இலக்கியங்களுக்கு பங்களிப்பை அளித்தவருமான, காரைக்கால் அம்மையாரின் புகழைப் போற்றும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதம் பங்குனியில் அவர் அவதரித்த சுவாதி திருநட்சத்திரத்தன்று கோயில் சார்பாக விழா எடுக்கப்படும்.
* திண்டுக்கல், பழனி, பழனியாண்டவர் கோயில் மற்றும் சென்னை மாவட்டம், மயிலாப்பூர், கபாலீசுவரர் கோயில் ஆகிய 2 கோயில்களின் சார்பாக ஓதுவார் பயிற்சிப் பள்ளிகள் புதியதாகத் தொடங்கப்படும்.
* காஞ்சீபுரம் வட்டம், தம்மனூர், ஏகாம்பரேசுவரர் கோவிலில் ரூ.1.87 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
* காஞ்சீபுரம், குன்றத்தூர் வட்டம், அமரம்பேடு, கரியமாணிக்கப்பெருமாள் கோவிலில் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
* சென்னை, திருவொற்றியூர், திருவள்ளுவர் கோயில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.
* சென்னை மாநகர் மற்றும் சென்னை புறநகரில் அமைந்துள்ள 115 கோயில்களில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் திருப்பணி செய்து திருக்குட நன்னீராட்டு விழா நடத்தப்படும்.

The post இந்து அறநிலையத்துறையில் 108 அறிவிப்புகள் 17 ஆயிரம் கோயில்களுக்கு வைப்புத்தொகை ரூ.2.5 லட்சமாக உயர்வு: சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Hindu Endowment Department ,Minister ,Shekharbabu ,Legislative Assembly ,CHENNAI ,Tamil Nadu ,Hindu Charities Department ,
× RELATED நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தில்...