×

* பேரவையில் இன்று…

சட்டசபையின் இன்றைய கூட்டம் காலை 9.30 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்குகிறது. கேள்வி நேரம் முடிந்ததும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை, கைத்தறி மற்றும் துணி நூல் துறை மீதான மானியக் கோரிக்கைகள் விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் பேசுகிறார்கள். இறுதியாக தங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிடுவார்கள். மாலை 5 மணிக்கு மீண்டும் கூடும் சட்டசபை கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று பேசும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் பதில் அளித்து பேசி, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிடுவார்கள்.

* மாற்றுத்திறன் முன்னாள் படைவீரர்களுக்கு பிரத்யேக பெட்ரோல் ஸ்கூட்டர் இலவசமாக வழங்கப்படும்: அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு
பேரவையில் நேற்று பொதுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த பின்னர் அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்ட அறிவிப்புகள்: மாற்றுத்திறன் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்களின் வாழ்க்கை நடைமுறையை சுலபமாக்கும் நோக்குடன் அவர்களின் அன்றாட தேவைகளை அவர்களே பூர்த்தி செய்திடும் வகையில் தேவைக்கேற்ப இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பிரத்யேக பெட்ரோல் ஸ்கூட்டர் அல்லது சிறப்பு பேட்டரி சக்கர நாற்காலிகள் இலவசமாக வழங்கப்படும். முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில், தையல் பயிற்சி சான்று பெற்றிருப்பின், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படும்.

* இலங்கை தமிழர்களுக்காக தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவிப்பு
பேரவையில் நேற்று பொது (மறுவாழ்வுத்)துறை, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த பின்பு அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வெளியிட்ட அறிவிப்புகள்:
மண்டபம் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு தொழில் வாய்ப்புகளை உருவாக்கி, முகாம் மக்களின் பொருளாதாரம் மேம்பாடு அடைவதுடன், அவர்கள் சுய சார்புடன் மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழ்வதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும். இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் மரம் நடுதல், நாற்றங்கால் அமைத்தல், வீட்டு தோட்டங்கள் அமைக்கும் திட்டம் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும். இலங்கை தமிழர்களின் மனநல மேம்பாட்டை நோக்கமாக கொண்டு, மனநல விழிப்புணர்வை மேற்கொள்ள பொது சுகாதாரம், மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும்.

* பெரிய தொகுதிகளுக்கு ரூ.3 கோடி தொகுதி மேம்பாட்டு நிதி போதவில்லை: திமுக எம்எல்ஏ வருத்தம்
சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாத்தில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி (திமுக) பேசியதாவது: சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியை பொறுத்தவரையில் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதை ரூ.5 கோடியாக உயர்த்தித் தர வேண்டும். அது மட்டுமல்ல ரூ.3 கோடி அளித்தால், 18% பிடித்து விடுகிறார்கள். மீதம் இருக்கும் தொகையை வைத்து அந்தப் பணிகளைச் செய்ய முடியவில்லை. 2 லட்சம் வாக்காளர்களுக்கும் 3 கோடி, எங்களைப் போன்ற ஆலந்தூர், தாம்பரம், பல்லாவரம், செங்கல்பட்டு, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 லட்சம் வாக்காளர்கள் உள்ள தொகுதிக்கும் அதே 3 கோடிதான் தரப்படுகிறது. இதை 5 கோடியாக உயர்த்த வேண்டும் என்றார்.

The post * பேரவையில் இன்று… appeared first on Dinakaran.

Tags : Youth Welfare and Sports Development Department ,Special Project Implementation Department ,and Textiles Department ,Dinakaran ,
× RELATED மகளிர் சுய உதவி குழுக்களுக்கு...