×

ஊழல் தடுப்பு, கண்காணிப்பு அதிகாரிகளுக்கு ரூ.2.50 கோடியில் 22 நான்கு சக்கர வாகனம் 44 இருசக்கர வாகனம் வழங்கப்படும்: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை: பேரவையில் நேற்று மனிதவள மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த பின்பு அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்புகள்:
* அரசு உயர் பதவிகளுக்கு தேர்வு செய்யப்படும் அலுவலர்கள் பணியில் சேரும் பொழுது கொடுக்கப்படும் பயிற்சியைத் தவிர பணியிடைப் பயிற்சிகள் தற்போது வழங்கப்படுவதில்லை. பல்வேறு துறைகளில் இணை இயக்குநர் நிலையில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர், ஊரக வளர்ச்சித் துறை, கூட்டுறவுத் துறை, வணிகவரித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் அரசு உயர் அலுவலர்களுக்கு ஆளுமைத் திறன் மேம்பாடு, தகவல் தொழில் நுட்பம், வழக்கு மேலாண்மை போன்ற பொருண்மைகளில் நாட்டிலேயே தலைசிறந்த நிறுவனங்களைக் கொண்டு பணியிடைப் பயிற்சி வழங்கப்படும். இந்நிதியாண்டில் இதற்கென ரூ.1 கோடி ஒதுக்கப்படும்.

* தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட 2022-23ம் ஆண்டிற்கான தொகுதி-1 பணிகளுக்கான தேர்வில் துணை ஆட்சியர், காவல்துணை கண்காணிப்பாளர், உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 95 அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தொகுதி -1 அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டவுடன், தொடர்புடைய துறைகளை கலந்தாலோசித்து பொது அடிப்படைப் பயிற்சி திட்டம் வழங்கப்படும்.

* அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் முறையாக மக்களிடம் சென்றடைகிறதா என்பதை ஆய்வு செய்யவும், தகுதியுடைய பயனாளிகள் எவரேனும் விடுபட்டு விட்டனரா என்பதை கண்டறியவும், கடைக்கோடி மக்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்றடையவும், இதன் வாயிலாக அரசுத் திட்டங்களை மேலும் செம்மைப்படுத்தவும் அரசு அலுவலர்களுக்கு தரவுப் பகுப்பாய்வு குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இந்நிதியாண்டில் இதற்கென ரூ.50 லட்சம் ஒதுக்கப்படும்.

* ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் தங்கள் பணிகளை திறம்பட மேற்கொள்வதற்கென, பயன்பாட்டில் இருக்கும் பழைய வாகனங்களைக் கழித்து, மாற்றாக ரூ.2.58 கோடியில் 22 நான்கு சக்கர வாகனங்களும், 44 இருசக்கர வாகனங்களும் வழங்கப்படும்.

The post ஊழல் தடுப்பு, கண்காணிப்பு அதிகாரிகளுக்கு ரூ.2.50 கோடியில் 22 நான்கு சக்கர வாகனம் 44 இருசக்கர வாகனம் வழங்கப்படும்: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister Thangam ,South Government ,CHENNAI ,Human Resource Management Department ,Minister ,Thangam Tennarasu ,Thangam ,Dinakaran ,
× RELATED சென்னை திருவிக நகர் பகுதியில்...