×

காரீப் கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டாலுக்கு ரூ.105, சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130 ஊக்கத் தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: 2024-25ம் ஆண்டு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் காரீப் கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105, சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130 கூடுதல் ஊக்கத் தொகையாக தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நெல்லுக்கு விலை நிர்ணயம் செய்வது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி, ஐஏஎஸ் அதிகாரிகள் முருகானந்தம், உதயசந்திரன், கோபால், அபூர்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின்னர், தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில்: விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் காரீப் 2024-25 நெல் கொள்முதல் பருவத்திற்கு ஆதார விலையுடன் ஊக்கத்தொகையும் சேர்த்து விவசாயிகளுக்கு வழங்குவது குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கடந்த 2023-2024 காரீப் கொள்முதல் பருவத்தில் நேற்று முன்தினம் வரையில் 3,175 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 3,72,310 விவசாயிகளிடமிருந்து 29,91,954 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.6,442.80 கோடி விற்பனை தொகையாக வழங்கப்பட்டது ஆகிய விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் அதே அடிப்படையில், இந்த ஆண்டும் காரீப் கொள்முதல் 2024-2025 பருவத்தில் தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து ஒன்றிய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. இந்த ஆண்டு கடந்த 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட இயலாத சூழ்நிலையில், டெல்டா மாவட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.78.67 கோடி மதிப்பீட்டில் குறுவைத் தொகுப்பு திட்டத்தினை முதல்வர் செயல்படுத்திட உத்தரவிட்டார். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

அத்துடன் விவசாயிகளின் நலன் கருதி காரீப் 2024-2025 பருவத்திற்கான நெல் கொள்முதலினை வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் மேற்கொள்ள ஒன்றிய அரசை, இவ்வரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் காரீப் 2024-2025 பருவத்திற்கான நெல் கொள்முதலினை வரும் ெசப்டம்பர் 1ம் தேதி முதல் மேற்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது. ஒன்றிய அரசு அண்மையில் காரீப் 2024-2025 பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதாரவிலையாக சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,300என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,320 என்றும் நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் நெல் உற்பத்தியினைப் பெருக்கும் வகையிலும், விவசாயிகளின் வாழ்வை வளப்படுத்தி அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு, 2024-2025 காரீப் கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105, சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130 கூடுதல் ஊக்கத் தொகையாக தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்து வழங்கிடவும், அதன்படி விவசாயிகளிடமிருந்து சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,405, சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,450 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்திட உத்தவிட்டுள்ளார். இந்த புதிய குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத் தொகை வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். அத்துடன், தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு, அடுத்து வரும் 2025-26 நிதியாண்டில், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 என்ற வீதத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு வழங்கிடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post காரீப் கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டாலுக்கு ரூ.105, சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130 ஊக்கத் தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kharib ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,Tamil Nadu ,M.K. ,Tamil Nadu government ,Caribbean ,Dinakaran ,
× RELATED கள்ளச்சாராய விவகாரத்தில் யாருக்கும்...