- சென்னை
- புலம்பெயர் தமிழர் நலன் மற்றும் புனர்வாழ்வுத் துறை
- அமைச்சர்
- செஞ்சி மஸ்தான்
- உக்ரைன்
- ரஷ்யா-உக்ரைன் போர்
- இஸ்ரேல்
- பாலஸ்தீனம்
சென்னை: பேரவையில் நேற்று அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியதாவது: ரஷ்யா-உக்ரைன் போரினால் உக்ரைன் நாட்டில் சிக்கித் தவித்த 1,890 மாணவர்கள், இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினையினால் இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவித்த 126 தமிழர்கள், சூடானிலிருந்து 281 பேர், இந்தோனேசியாவில் இருந்து 3 பேர், ஈரான் நாட்டிலிருந்து 6 பேர், குவைத்தில் இருந்து 34 பேர், ஓமனிலிருந்து 27 பேர், மலேசியாவில் இருந்து 4 பேர் மீட்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும் தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
அமர்நாத்திற்கு புனித பயணம் மேற்கொண்ட 17 பேர், மணிப்பூர் கலவரத்தின் போது அங்கு சிக்கித் தவித்த 8 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் வெளியிடங்களில் இறந்த 729 பேரி உடல்கள் இங்கு கொண்டு வரப்பட்டு, தமிழ்நாடு அரசின் இலவச அமரர் ஊர்தி சேவை மூலம் குடும்பத்தாரிடம் அவர்களின் வீட்டிற்கே சென்று ஒப்படைக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் பணிபுரியும்போது மரணமடையும் தமிழர்களுக்கான இழப்பீடு, ஊதிய நிலுவைத் தொகை, தவறாக செயல்படுகிற முகவர்கள் மீதான புகார், வேலை வாய்ப்பு தொடர்பான புகார்கள் என இதுவரையிலும் 800-க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டில் தற்போது 105 முகாம்கள் உள்ளன. இம்முகாம்களில் 19 ஆயிரத்து, 574 குடும்பங்களை சேர்ந்த 57 ஆயிரத்து 772 இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். முகாம்களுக்கு வெளியே 13 ஆயிரத்து 230 குடும்பங்களைச் சேர்ந்த 32 ஆயிரத்து 962 தமிழர்கள் வசித்து வருகிறார்கள். முகாம்களில் வசிக்கிற இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ், முதற்கட்ட வீடுகளில் இதுவரையிலும் 2,448 வீடுகள் பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. 2ம் தவணையாக 3,959 வீடுகள் கட்டப்பட உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
The post இலங்கை தமிழர்களுக்கு 3,959 வீடுகள் கட்டப்படும்: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.