×

தாய்ப்பால்… நம்பிக்கைகளும் நிதர்சனமும்!

நன்றி குங்குமம் டாக்டர்

மனநல மருத்துவர் உஷா நந்தினி

‘‘உனக்கு வலி தாங்கும் சக்தியில்லை. அதனால்தான் ஆபரேஷன் செய்து, குழந்தையை எடுத்தார்கள். ஆபரேஷன் செய்ததால்தான், இப்ப குழந்தைக்குப் பால் வரலை பாரு.”
‘‘நீ நோஞ்சான் போல இருப்பதால்தான் சுகப்பிரசவம் நடந்தும், பால் வரவில்லை. பவுடர் பால் வாங்கிக் கொடுக்க வேண்டியதாக இருக்கு’’.‘‘குழந்தை பிறந்த வயிறு புண்ணாயிருக்கும், உப்பு-காரம் (அதாவது எந்த சுவையும்) இல்லாமல் பத்தியச் சாப்பாடுதான் சாப்பிடணும் ’’.

‘‘சளி, காய்ச்சல் வச்சிக்கிட்டு குழந்தைக்குப் பால் கொடுக்கக் கூடாது. குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல் போய்விடும்’’.‘‘அவளுக்கு பால் குடுக்கத் தெரியாது. இப்ப உள்ள புள்ளைங்களுக்கு என்னதான் தெரியுதோ? நானே என் பேரப் புள்ளைக்கு சங்குல பால் கொடுக்குறேன். என்கிட்டதான், அவங்க அம்மாவைவிட அதிகமா ஒட்டிக்கிறான்/ள் ’’.இந்த மாதிரி பெரியவர்கள், நெருங்கிய சொந்தங்கள் பேசுவதைக் கணக்கெடுத்தால், கணக்கு வழக்கில்லாமல் இந்த மித் லிஸ்ட் போய்க் கொண்டே இருக்கும். இன்னும் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், உங்கள் வீட்டிலோ அக்கம் பக்கத்திலோ புதிதாக குழந்தை பெற்றிருக்கிற பெண்ணிடம் கேளுங்கள். புலம்பித் தீர்த்து விடுவார்.

இத்தனை குறைகளையும், குழந்தை பெற்ற பெண்ணைப் பார்த்து பேசிவிட்டு, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதுகூட இந்தக் காலத்து பெண்களுக்குக் கஷ்டமாக இருக்கிறது என்று பேசுவார்கள். அதுதான் பிரசவ வலியைவிட, இன்னும் பெண்களுக்கு வேதனையாக இருக்கும். இந்த மாதிரி எந்தவித பேச்சையும் கேட்க வேண்டிய அவசியமில்லாததால்தான், மற்ற பாலூட்டிகள் பால் கொடுப்பதில் எந்த சிரமமும் இல்லாமல் இருக்கிறதோ என்னவோ!தாய்ப்பால் கொடுப்பது மிகவும் இயற்கையான விஷயம் என்றாலும், அதைப் பற்றின புரிதலும், அதன் முக்கியத்துவமும், அதில் ஏற்படும் சிரமங்களும் சற்று விளக்கி புரிய வைக்க வேண்டிய ஒன்றாகவே இன்றைய சூழல் நமக்கு அமைந்திருக்கிறது.

சுகப்பிரசவம் அல்லது ஆபரேஷன், இதில் எதன் மூலமாக குழந்தை பிறந்தாலும், தாய்ப்பால் ஊறி வருவதில், எந்த வித்தியாசமும் இருக்கப் போவதில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும். அம்மா நினைவோடு இருந்தால் எவ்வளவு வேகமாகத் தாய்ப்பால் கொடுக்க முடியுமோ, அவ்வளவு வேகமாக தாய்ப் பால் கொடுப்பது நல்லது. குழந்தைக்கு பிறந்த உடனே, ஏற்படக்கூடிய பல பிரச்னைகளை இதன் மூலம் தவிர்க்கலாம் என்பதே மருத்துவ அறிவியல் நமக்கு விளக்கியுள்ளது. ஆனால் இதை எப்படி செயல்படுத்துவது?

குழந்தை பிறப்பதற்கு முன்பே தாய்ப் பாலின் குணங்கள் பற்றி அறிந்திருக்க வேண்டும். டாக்டரிடம் முன்னாடியே தன் குழந்தைக்கு எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக தாய்ப் பால் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று பேச வேண்டும். சுகப்பிரசவமோ அல்லது ஆபரேஷனோ, குழந்தை வெளியில் வந்து அழுதவுடன் தாயின் மாரின் மீது குழந்தையைப் படுக்க வைத்தால் போதும். அது இயற்கையாகவே, மார்புக் காம்பை நோக்கி தலையைத் திருப்பி சப்பிக் குடிக்க ஆரம்பித்துவிடும்.

அப்படி முடியவில்லை என்றால், மருத்துவமனையில் இருக்கும் செவிலியர் அல்லது உடன் இருக்கும் பெரியவர்கள், குழந்தையின் தலையைத் தாங்கிப் பிடித்து மாரின் மீது கொண்டு சென்றால், குழந்தை மார்பு இருக்கும் திசைக்கு ஏற்றவாறு பாலை குடிக்க ஆரம்பித்து விடும். இதில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், பால் முதல் இரண்டு நாட்களுக்கு வெள்ளையாக வராது. பெண்ணுக்கு முதலில் சுரக்கும் பால், மாநிறத்துடன் ஒரு சில சொட்டுகளே வரும். அதனால், அதை வைத்து பால் சுரக்கவில்லை என்று கணிக்கக் கூடாது. அந்த ஒருசில சொட்டு தாய்ப்பாலை சீம்பால் என்பார்கள். இது மிகவும் ஊட்டச் சத்து நிறைந்தது. அதை திரவத் தங்கம் எனவும் கூறுவார்கள். குழந்தைக்கு முதலில் பிறந்தவுடன் தேவையானது, அந்த ஒரு சில சொட்டுகள்தான் என்பதை நாம் என்றுமே மறக்கக் கூடாது.

ஏனென்றால், தாயின் மார்பில் இருந்து, குழந்தை பிறந்து முதலில் தன் வாய் திறந்து குடிக்கப் பழக வேண்டும். குழந்தைக்கு அது ஒரு மன அழுத்தம். ஒரு வாய் அழுத்திக் குடித்தவுடன், வாய் வலிக்கும், அந்த வலியில் தூக்கம் வரும். மறுபடியும் வாய் திறந்து குடிக்க வேண்டும். குழந்தையைப் பொறுத்தவரை இதுதான் முதல் முதலான பயிற்சியாகும். தாய்க்கும், குழந்தை மார்பில் வாய் வைக்க வைக்க பால் சுரப்பின் தன்மை அதிகமாகும். அடுத்தபடியாக, அம்மாவின் மார்பில் சாய்ந்து பால் குடிக்கும் போது, குழந்தைக்கு கையையும் காலையும் ஆட்டி, பயிற்சி செய்து பழகக் கூடிய தருணமாகும்.

இது உடன் இருப்பவர்களுக்குப் புரியாது. உடனே பால் வரவில்லையா, அப்பவே நல்லா சத்தானதை சாப்பிட்டு இருக்கணும் என்று புலம்ப ஆரம்பித்து விடுவார்கள். இந்த நேரத்தில்தான், உதவியாளர்கள் பவுடர் பாலை சங்குல கொடுக்குற வித்தையெல்லாம் செய்வார்கள். இதன் விளைவு, அந்த குழந்தைக்கு கிடைக்க வேண்டிய எதிர்ப்புசக்தி, ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போவது மட்டுமில்லாமல், சங்கில் சட்டென்று வந்து விடும் பாலைக் குடித்துப் பழகி விட்டு, குழந்தைக்கு அம்மாவின் மார்பில் குடிக்கும் போது, கஷ்டப்பட்டு குடிக்க வேண்டியதாக இருக்கிறது. இதனால் தாய்ப்பாலை குடிக்க விரும்பாது.

அம்மாவின் மார்பில் குடிக்கும் பொழுது, குழந்தை விளையாட்டுடன், முழு மூச்சாக முக்கிக் குடிக்கும். இது தன் குழந்தைக்கு கையையும் காலையும் ஆட்டி, பயிற்சி செய்து பழகக் கூடிய தருணமாகும். இம்மாதிரியான விஷயங்கள்தான் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் மிகவும் இயற்கையானது. அம்மாவின் அரவணைப்பில் உள்ளதால், அந்தக் குழந்தை, சமூகத்துடன் ஒத்துழைத்து போகும் குணாதிசயமும் நன்றாக அமையும். இதெல்லாம் புரியாமல், நானே குழந்தையை வைத்து பால் கொடுத்துக்குறேன் என்று பெரியவர்கள் செய்யும் அட்டூழியம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. குழந்தை கூட இருந்தால் அம்மாவுக்கும் பிரசவத்துக்குப் பிறகான மன அழுத்தம் (Post Partum Depression) போன்ற நோய்கள் வருவதும் குறையும்.

அடுத்து வேலைக்கு செல்லும் பெண்கள் படும்பாடு. அந்த அம்மாவுக்கே குழந்தையை விட்டுவிட்டு போகணுமே என்ற குற்ற உணர்ச்சி அதிகம் இருக்கும். இதில் எரியுற தீயில் எண்ணெயை ஊற்றுவது போல், எத்தனை பேரிடம் பேச்சு வாங்க வேண்டி இருக்கிறது. வேலைக்குச் செல்லும் நிலையை அரசாங்கம் மாற்றி கொடுத்தால், அவள் ஏன் வேலைக்கு செல்லப் போகிறாள்? ஊதியத்துடன் கூடிய பேறு கால விடுமுறை (Paid Maternity Leave) எல்லா பெண்களுக்கும் கிடைப்பதில்லை. இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். வேலைக்கு போகும் அம்மாக்களின் குழந்தைகளுக்கு அப்படி தொடர்ந்து தாய்ப் பால் கொடுப்பது எப்படி என்பதையும் தெரிந்து கொள்வோம்? இதற்கு பாலை பீச்சி எடுத்து வைத்து கொடுக்கும் வழி உள்ளது. கையில் செய்யலாம், பிரஸ்ட் பம்ப் என்ற கருவியிலும் செய்யலாம்.

இப்படி எடுத்து வைக்கும் தாய்ப்பால், நான்கு மணி நேரம் வரை வெளியில் கெடாமல் இருக்கும். இதை சுத்தமாக எடுத்து சங்கிலோ, ஸ்பூனிலோ, டம்ளரிலோ, பாட்டிலிலோ கொடுக்கலாம். சுத்தமாக கையைக் கழுவி விட்டு, அந்த பொருட்களை ஸ்டெர்லைஸ் (Sterilize) செய்ய சுடுதண்ணியில் போட்டு எடுத்து வைத்து பயன்படுத்த வேண்டும். இப்படி செய்வதினால் வேலைக்குச் சென்றாலும், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியும். இதில் கணவரும் குழந்தை வளர்ப்பில் ஈடுபட வேண்டும் என்று நினைப்பவர்களும் செய்யலாம்.

இரவு அம்மாவைத் தூங்க விட்டு விட்டு, இரண்டு தடவை குழந்தை எழும் போது அம்மாவை எழுப்பாமல், எடுத்து வைத்தப் பாலைக் கொடுக்கலாம் கணவர். இது ஜனநாயக குழந்தை வளர்ப்பை (Equal Parenting) முதலிலேயே கொண்டு வர உதவும். இதைப் பற்றின புரிதலுக்கு உங்கள் டாக்டர் இடமே கேட்கலாம். தாய்ப்பால் வெளியேற்றம் மற்றும் பாதுகாப்பது (Expression of Breastmilk & Storage) குறித்து அவர்கள் சொல்லிக் கொடுப்பார்கள்.

சரி, பவுடர் பால் எதிரியா? என்று கேட்டால், கிடையாது. சில பெண்கள் பால் கொடுக்க முடியாத சில நோய்களால் அவதிப்படலாம். சிலருக்கு அப்படியான சூழ்நிலை ஏற்படலாம். மேலும், பாலை பீச்சி எடுத்து வைக்க முடியாத நிலையிலும் இருப்பார்கள். இல்லையெனில் நிஜமாகவே பால் பத்தாமல் போய் இருக்கும். இந்த மாதிரி நேரங்களில் பவுடர் பால் சரியான முறையில் கொடுப்பது என்பது அந்த குழந்தைகளுக்கு கிடைத்த வரமாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் நாம் தெரிந்துகொண்டும், புரிந்துகொண்டும் தாய்ப்பால் கொடுப்பதை செயல்படுத்தினால் அந்த தாய்க்கு மனதளவில் ஆதரவாக இருக்கும். ஒரு குழந்தையை வளர்க்க ஒரு கிராமமே தேவைப்படும் என்பார்கள். நீங்களும் அந்த கிராமத்தில் ஒருவராக இருந்தீர்கள் என்றால் தாய்ப்பால் கொடுப்பதில் உள்ள சிரமங்களை புரிந்து, தாய்க்கு உறுதுணையாக இருங்கள் என்பதே தாய்மை உங்களிடம் சொல்லும் சேதி.

The post தாய்ப்பால்… நம்பிக்கைகளும் நிதர்சனமும்! appeared first on Dinakaran.

Tags : Usha Nandini ,
× RELATED பிரபாஸ் போல் வலுவாக… ஃபிட்னெஸ் டிப்ஸ்!