×

கென்யாவில் வரி உயர்வை கண்டித்து போராட்டம்.. வன்முறையில் 13 பேர் பலி; நாடாளுமன்றத்திற்கு தீ வைப்பு; இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!!

நைரோபி : கென்யாவில் அரசு எதிராக போராட்டம் வன்முறையாக மாறியதால் 13 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து கென்யாவில் பதற்றம் நிலவுவதால் அங்கு வசிக்கும் இந்தியர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. கென்யாவில் வரிகளை உயர்த்தும் சர்ச்சைக்குரிய மசோதாவை அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார். இந்த வரி உயர்வு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்த நிலையில், அது வன்முறையாக மாறியது. தலைநகர் நைரோபியில் நடைபெற்ற வன்முறையின் போது, ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி கென்யா நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன் கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசினர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஓடியதால் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியது. இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் ஒரு பகுதிக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். தீ வைக்கப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இதனையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த கண்ணீர் புகைக்குண்டுகளை போலீசார் வீசினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் இதுவரை 13 பேர் பலியாகி உள்ளனர். இதனிடையே கென்யாவில் பதற்றம் நிலவி வருவதால் அங்கு வாழும் இந்தியர்கள் அத்தியாவசியமின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

The post கென்யாவில் வரி உயர்வை கண்டித்து போராட்டம்.. வன்முறையில் 13 பேர் பலி; நாடாளுமன்றத்திற்கு தீ வைப்பு; இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!! appeared first on Dinakaran.

Tags : Kenya ,Indians ,NAIROBI ,INDIAN EMBASSY ,Dinakaran ,
× RELATED கென்யாவில் போலீஸ் துப்பாக்கிசூட்டில் 13 பேர் பலி