×

ஓசூர் அருகே கழிவுநீர் லாரியின் மீது ஆலமரம் விழுந்து விபத்து: இருவர் உயிரிழப்பு

ஓசூர்: ஓசூர் அடுத்த பக்தகிரி பகுதியில் கழிவு நீர் லாரியின் மீது ஆலமரம் விழுந்த விபத்தில் வாகனத்தில் இருந்த இருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஓசூர் அருகே மத்திகிரி என்ற பகுதியில் இசம்பவம் நடைபெற்றுள்ளது. ஓசூர் பாளையம் பகுதியை சேர்ந்த மாரப்பா மற்றும் வெங்கடேஷ் ஆகிய இரண்டு பேரும் கழிவுநீர் அகற்றும் வாகனத்தில் வேலை செய்து வருகின்றனர்.

இவர்கள் இன்று வழக்கம் போல் இந்த பணிகளுக்கு இடைநல்லூர் என்ற கிராமத்திற்கு சென்றனர். அங்கு பணிகளை முடித்துவிட்டு மீண்டும் ஓசூர் நோக்கி கழிவுநீர் வாகனத்தில் வந்துகொண்டிருந்தனர். பிசிலி பாளையம் என்ற இடத்தில் பழமையான ஆலமரம் ஒன்று உள்ளது. இந்த மரம் அதிக காற்றின் காரணமாக கழிவுநீர் லாரி மீது முறிந்து விழுந்தது. இதில் வாகனத்தில் இருந்த ஓட்டுநர் வெங்கடேஷ், மாரப்பா ஆகிய இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். அப்பகுதியில் உள்ள மின் கம்பிகள் அறுந்து வாகனத்தின் மீது விழுந்துள்ளது.

இதனால் அவர்கள் மீது மின்சாரமும் தாக்கியுள்ளது. சம்பவ இடத்தில் மத்திகிரி காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர் ஆகிய அணைத்து துறையினரும் அப்பகுதியில் உள்ள மரங்களை அறுத்து அதை அப்புறப்படுத்தி உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் உள்ள பழமையான மரங்களை உடனடியாக அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post ஓசூர் அருகே கழிவுநீர் லாரியின் மீது ஆலமரம் விழுந்து விபத்து: இருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Hosur ,Bakhtagiri ,Ozur ,Madhgiri ,Dinakaran ,
× RELATED ஓசூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ரத்து