×

புதுச்சேரியில் பரபரப்பு வாடகைதாரரை வெளியேற்றி உரிமையாளரிடம் வீடு ஒப்படைப்பு

*கோயில் இடம் எனக்கூறி தடுக்க முயன்ற சமூக, பொதுநல அமைப்பினர்

புதுச்சேரி : புதுச்சேரி ஒயிட் டவுன் பகுதியில் வீட்டில் வாடகைதாரரை வெளியேற்றி உரிமையாளரிடம் நீதிமன்ற ஊழியர்கள் ஒப்படைத்தனர். கோயில் இடம் எனக்கூறி சமூக, பொதுநல அமைப்பினர் தடுக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி காமாட்சி அம்மன் கோயில் வீதியில் ஒரு வீட்டின் உரிமையாளர், அந்த வீட்டின் மூலமாக கிடைக்கும் வருமானத்தை காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோயிலில் நடக்கும் கந்தசஷ்டி விழா செலவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என கடந்த 1922ல் உறுதிமொழி பத்திரம் எழுதி வைத்ததாக தெரிகிறது. அந்த வீட்டில் கடந்த 2004 முதல் தனிநபர் ஒருவர் குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளரின் வாரிசுதாரர்கள், புதுச்சேரி கோர்ட்டில் முறையிட்டனர். அதில், இந்த வீட்டை காலி செய்து வாரிசுதாரர்களான தங்களிடம் ஒப்படைக்க கோரியிருந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், அந்த வீட்டை காலிசெய்து மேற்கண்ட நபர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து வாடகைதாரரின் மனைவி, சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

அதிலும் வாரிசுதாரர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்த நிலையில், அங்கும் வாடகைதாரருக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது. மேலும், வீட்டை காலி செய்ய வாடகைதாரருக்கு ஒரு ஆண்டு காலஅவகாசம் நீதிமன்றம் கொடுத்துள்ளது. ஆனால் ஒரு ஆண்டு முடிந்தும் வீட்டை காலி செய்யாமல் மேலும் காலநீட்டிப்பு கேட்டு வாடகைதாரர் கேட்டபோது, அதற்கு நீதிமன்றம் தர மறுத்து, 15 நாட்களுக்குள் இடத்தை காலி செய்ய உத்தரவிட்டது.

இதற்கிடையே வாடகைதாரர் மற்றும் பல்வேறு சமூக, பொதுநல அமைப்பினர் இப்பிரச்னையை இந்து சமய அறநிலையத்துறைக்கு எடுத்துச் சென்றனர். இதையடுத்து, `வருவாய்த்துறை ஆவணங்களின்படி இந்த இடமானது ஈஸ்வர தர்மராஜா கோயில் தற்கால அறங்காவலர் பெயரில் பட்டா உள்ள கோயில் இடமாகும், எனவே, 7 நாட்களுக்குள் வீட்டை காலி செய்து, கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்குமாறு கடந்த 21ம் தேதி கோயில் நிர்வாக அதிகாரி சீனுவாசன் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின்பேரில், மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாறன், திவிக தலைவர் லோகு அய்யப்பன், தலித் மக்கள் விடுதலை இயக்கம் பிரகாஷ், ராஜா மற்றும் பல்வேறு சமூக, பொதுநல அமைப்பினர் 50க்கும் மேற்பட்டோர் வீட்டை காலி செய்து, அறநிலையத்துறை ஆணையரிடம் ஒப்படைக்க காமாட்சி அம்மன் கோயில் வீதிக்கு நேற்று காலை வந்தனர். அப்போது அங்கு பெரியகடை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

இதுபற்றி, வாரிசுதாரர்கள் புதுச்சேரி நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவித்ததால், கோர்ட் அமினா அம்பி மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், பிரச்னைக்குரிய வீட்டுக்கு விரைந்து வந்தனர். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கர் மற்றும் போலீசாரிடம், சுப்ரீம் கோர்ட் உத்தரவை காண்பித்தார். கோர்ட் உத்தரவின்படி வீட்டை காலி செய்து, வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்க வந்திருப்பதாக கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக அமைப்பினர், மேற்கண்ட வீட்டை இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கக்கோரி வாக்குவாதம் செய்தனர்.

ஆனால் கோர்ட் உத்தரவின்படிதான் செயல்பட முடியும் என அமினா கூறினார். இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் பிரித்திவி, இதில் சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்க முடியும், நீங்கள் நீதிமன்றத்தை நாடி உரிய தீர்வு பெற்றுக் கொள்ளுங்கள் என சமூக அமைப்பினரிடம் கூறினார். இதையடுத்து சமூக, பொதுநல அமைப்பினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர், போலீஸ் பாதுகாப்புடன், வீட்டை காலி செய்து, வாரிசுதாரர்களிடம் அமினா ஒப்படைத்தார்.
இச்சம்பவத்தால் நேற்று அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post புதுச்சேரியில் பரபரப்பு வாடகைதாரரை வெளியேற்றி உரிமையாளரிடம் வீடு ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Busy ,Puducherry ,White Town ,
× RELATED புதுச்சேரி சுப்பையா சாலையில்...