×

மறுகால்நீர் செல்லும் பாதை ஆக்கிரமிப்பு துர்நாற்றம் வீசும் கடலையூர் நீராவி தெப்பக்குளம்

*சீரமைக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

கோவில்பட்டி : கோவில்பட்டி வட்டாரம் கடலையூர் ஊராட்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட நீராவி தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பக்குளத்திற்கு கோவில்பட்டி, லிங்கம்பட்டி பகுதிகளில் பெய்யக்கூடிய மழைநீர், கடலையூர் பாசன கண்மாய்க்கு வந்து அதன் மறுகால் தண்ணீர் தெப்பக்குளத்தை வந்தடைகிறது. தெப்பக்குளம் நிரம்பி அதன் மறுகால் வடகிழக்கு திசையை நோக்கி தனியார் நிலத்தின் நிலவியல் பாதை வழியாக வரதம்பட்டி கண்மாய்க்கு சென்றடைந்து வைப்பாறு ஆற்றில் கலக்கிறது. தெப்பக்குள தண்ணீர் இக்கிராம மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கால்நடைகளுக்கு குடிநீராகவும் பயன்பட்டது.

இந்நிலையில் நிலவியல் பாதை வழியாக தெப்பக்குளத்தின் மறுகால் தண்ணீர் செல்வதற்கு தனியார் எதிர்ப்பு தெரிவித்து நீர்வழித்தடத்தை மறித்து விட்டனர். இதனால் மழை காலத்தில் நிரம்பிய தெப்பக்குளம் தண்ணீர் வெளியேற வழியில்லாமலும், தெப்பக்குளத்தை சுற்றியுள்ள குடியிருப்புகளில் வெளியேறும் கழிவுநீர் தெப்பக்குள தண்ணீரில் கலந்து விட்டதாலும் துர்நாற்றம் வீசுகிறது. இதுதவிர சுற்றியுள்ள மக்கள் தங்கள் வீட்டு கழிவுகளையும் தெப்பத்திற்குள் போடுகின்றனர். இதனால் காலி பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள் மிதப்பதோடு இப்பகுதி அசுத்தமாக உள்ளது.

இதுதொடர்பான தொடர் புகார்களையடுத்து தங்கு தடையின்றி தெப்பக்குள மறுகால் தண்ணீர் வடக்கு நோக்கி செல்ல நிலவியல் பாதையில் கால்வாய் கட்டி அருகில் உள்ள நெடுஞ்சாலையில் பாலம் அமைத்து யாருக்கும் பாதிக்காத வகையில் தண்ணீரை வெளியேற்ற மாவட்ட திட்ட அதிகாரியால் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு நிர்வாக காரணங்களால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதனால் மறுகால் தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கிக் கிடக்கிறது.

எனவே இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்திடவும், நிலவியல் பாதை வழியாக யாருக்கும் பாதிக்காத வகையில் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

The post மறுகால்நீர் செல்லும் பாதை ஆக்கிரமிப்பு துர்நாற்றம் வீசும் கடலையூர் நீராவி தெப்பக்குளம் appeared first on Dinakaran.

Tags : Farmers' Association ,Kovilpatty ,Kadalaiur Uradachi ,
× RELATED தமிழகத்தில் பருத்தி விவசாயிகள்...