×

திங்கள் மனு நாளில் அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை புதியம்புத்தூர் அருகே அடைக்கப்பட்ட நடைபாதையை திறந்துவிட்ட அதிகாரிகள்

*2 வாரங்களுக்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்

ஓட்டப்பிடாரம் : புதியம்புத்தூர் அருகே கீழவேலாயுதபுரத்தில் அடைக்கப்பட்ட நடைபாதை, மாவட்ட கலெக்டரின் அதிரடி நடவடிக்கையால் திறக்கப்பட்டது. இதையடுத்து 2 வாரங்களுக்குப் பின்னர் நேற்று மாணவ, மாணவியர் பள்ளிக்குச் சென்றனர். தூத்துக்குடி அருகேயுள்ள புதூர்பாண்டியாபுரம் அடுத்த மேலவேலாயுதபுரத்தில், கீழவேலாயுதபுரம் கிராமத்திற்கு செல்வதற்கு சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக வழிப்பாதை உள்ளது. இந்த விலக்கிப் பாதை வழியாக கீழ வேலாயுதபுரத்தை சேர்ந்த குழந்தைகள், மேலவேலாயுதபுரத்தில் உள்ள பள்ளிக்கு சென்று வந்தனர். மேலும், பொதுமக்களும் இந்த பாதையை பயன்படுத்தி வந்தனர்.

தற்போது இந்த பாதையை தனிநபர் அடைத்து விட்டதால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் இருந்து வருவதாக கீழவேலாயுதபுரத்தை சேர்ந்த குழந்தைகளின் பெற்றோர் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் லட்சுமிபதியை சந்தித்து மனு அளித்தனர்.இதையடுத்து மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி அறிவுறுத்தலின்பேரில், நேற்று ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ் தலைமையில் வருவாய் துறையினர் மற்றும் புதியம்புத்தூர் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்தினை பார்வையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து, அடைக்கப்பட்ட பாதை திறக்கப்பட்டது. இதனால் கடந்த 2 வாரங்களாக பள்ளிக்கு செல்லாமல் இருந்த குழந்தைகள் நேற்று வழக்கம்போல பள்ளிக்குச் சென்றனர். மனு அளித்து ஒரே நாளில் பிரச்னைக்கு தீர்வு கண்ட மாவட்ட கலெக்டர் லட்சுமிபதிக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

The post திங்கள் மனு நாளில் அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை புதியம்புத்தூர் அருகே அடைக்கப்பட்ட நடைபாதையை திறந்துவிட்ட அதிகாரிகள் appeared first on Dinakaran.

Tags : Nayambuthur ,Puthurpandiapuram ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் மீனவர் பைக் எரிப்பு