×

சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

*கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

கடலூர் : சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் வேப்பூரை சேர்ந்த 13 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி அந்த சிறுமி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு பஸ் நிறுத்தத்தின் அருகே வந்தபோது, அந்த சிறுமி தனது சமூக அறிவியல் புத்தகத்தை வீட்டிலேயே வைத்து விட்டது சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த சிறுமி அந்த பஸ் நிறுத்தத்தின் அருகே நின்று கொண்டிருந்த ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள முடிகண்டநல்லூரை சேர்ந்த சிவக்குமார் மகன் ஜீவா(25) என்பவரிடம் தனது தாயாருக்கு போன் செய்து கொடுக்குமாறு தனது தாயாரின் செல்போன் எண்ணை கூறியுள்ளார். அந்த செல்போன் எண்ணை பெற்ற ஜீவா அவரது தாயாருக்கு போன் செய்யாமல் அவர் போனை எடுக்கவில்லை என்று அந்த சிறுமியிடம் கூறியுள்ளார். மேலும் தனது மோட்டார் சைக்கிளில் அந்த சிறுமியின் வீட்டில் விட்டு விடுவதாகவும் கூறியுள்ளார்.

இதை நம்பிய அந்த சிறுமி ஜீவாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது ஜீவா அந்தப் பகுதியில் உள்ள ஒரு சவுக்கு தோப்புக்கு அந்த சிறுமியை அழைத்துச் சென்று, வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதை செல்போனில் வீடியோவும் எடுத்து வைத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் வேப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜீவாவை கைது செய்தனர். மேலும் அவர் மீது கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

சாட்சிகள் விசாரணை நடந்து வந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் நீதிபதி லட்சுமி ரமேஷ் தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், ஜீவாவின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 70 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசின் ஏதாவது ஒரு திட்டத்திலிருந்து ரூ.7 லட்சம் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோதிரத்தினம் ஆஜராகி வாதாடினார்.

தண்டனை விதிக்கப்பட்ட ஜீவா யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவருக்கு தண்டனை வழங்கப்பட்ட போது சிறுமியை கடத்தி சென்றதற்காக 10 வருடமும், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 20 வருடமும், செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டியதற்காக 5 வருடமும் என மொத்தம் 35 வருடங்கள் தண்டனை வழங்கப்பட்டது. இதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டதால் அதிகபட்சமாக 20 வருடம் அவர் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

The post சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.

Tags : Cuddalore Pocso Court ,Cuddalore ,Vaypur ,
× RELATED கடலூர் மத்திய சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்