×

சத்தி அருகே வனப்பகுதியில் டெம்போவில் தொங்கியபடி மலைக்கிராம மாணவர்கள் பள்ளிக்கு அபாயகர பயணம்

*தற்காலிக பாலம் அமைத்து அரசு பேருந்து இயக்க கோரிக்கை

சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியில் ஆபத்தான முறையில் டெம்போவில் தொங்கியபடி மலைக்கிராம மாணவர்கள் பள்ளிக்கு அபாயகர பயணம் மேற்கொண்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் மாக்கம்பாளையம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உயர் நிலைப்பள்ளி மட்டுமே செயல்படுவதால் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் 23 கிமீ தூரமுள்ள கடம்பூர் மேல்நிலைப்பள்ளிக்கு வரவேண்டும்.

கடந்த ஒன்றரை மாதங்களாக அடர்ந்த வனப்பகுதியில் உள்ள குரும்பூர் பள்ளம் மற்றும் சர்க்கரைப்பள்ளம் என 2 பள்ளங்களில் மழை வெள்ளம் ஓடுவதால் கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையத்துக்கு காலை, மதியம், மாலை என 3 நேரங்களில் இயக்கப்பட்ட அரசு பேருந்து காட்டாற்றை கடக்க இயலாததால் சக்கரை பள்ளம் வரை மட்டுமே சென்று வருகிறது.

தற்போது, பள்ளி திறக்கப்பட்டுள்ள நிலையில் மாக்கம்பாளையத்தில் இருந்து கடம்பூர் செல்லும் டெம்போவில் மக்களோடு பிளஸ் -1, பிளஸ்- 2 படிக்கும் 27 மாணவ, மாணவிகள் அதிக கூட்டம் காரணமாக தொங்கியபடியும், டெம்போ மேல் அமர்ந்தும் ஆபத்தை உணராமல் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சக்கரைப்பள்ளம் வரை டெம்போவில் வரும் மாணவர்கள், பின்னர் அரசு பேருந்தில் ஏறி பள்ளிக்கு செல்கின்றனர்.

அதே நேரத்தில் மதியம் 1 மணிக்கு கடம்பூர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து மாக்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்த மாணவர்களை வீட்டுக்கு திருப்பி அனுப்பி விடுகின்றனர். இதனால் தங்கள் கல்வி பாதிக்கப்படுவதாகவும் தற்போது சர்க்கரைப்பள்ளத்தின் குறுக்கே தற்காலிக பாலம் அமைத்து மாக்கம்பாளையம் வரை அரசு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சத்தி அருகே வனப்பகுதியில் டெம்போவில் தொங்கியபடி மலைக்கிராம மாணவர்கள் பள்ளிக்கு அபாயகர பயணம் appeared first on Dinakaran.

Tags : Satti ,Sathyamangalam ,Kadampur ,Erode district ,Satthi ,
× RELATED சத்தி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ...