×

என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது…

தமிழக சட்டப் பேரவையில் நேற்று காலை நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்துக்கு இடையே நயினார் நாகேந்திரன் பேசி முடித்த போது, அமைச்சர் தங்கம் தென்னரசு எழுந்து நகைச்சுவையாக பேசினார். ‘‘இங்கே என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. சட்டசபை இன்றைக்கு விசித்திரமான சம்பவங்களை சந்திக்கிறது. நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பில் பாஜ உறுப்பினர் வானதி சீனிவாசன் மிகவும் கரிசனத்துடன் பேசினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் நாகை மாலி, வீர தளபதி விவேகானந்தர் குறித்து பேசினார். பாஜ உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசும்போது, காங்கிரஸ் உறுப்பினர் தாரகை கத்பட் பலமாக கைதட்டுகிறார். என்னமோ நடக்குது. மர்மமா இருக்குது..’’ என்று அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னதும் அவையில் சிரிப்பலை எழுந்தது. தொடர்ந்து பேசிய உறுப்பினர் நாகை மாலி, ‘‘விவேகானந்தரின் கருத்துகளை முழுமையாக நாங்கள் ஏற்கவில்லை. நல்ல கருத்துகளை மட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஏற்கிறது’’ என்றார்.

* பேரவையில் இன்று…
சட்டப்பேரவையில் இன்று காலை 9.30 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்குகிறது. கேள்வி நேரம் முடிந்ததும், திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத் துறை, மாநிலச் சட்டமன்றம், கவர்னர் மற்றும் அமைச்சரவை, எரிசக்தித் துறை, நிதித் துறை, மனித வள மேலாண்மை துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும் ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள்.

உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பேசுகிறார்கள். இறுதியாக தங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிடுகின்றனர். மாலை 5 மணிக்கு மீண்டும் கூடும் சட்டசபை கூட்டத்தில், சுற்றுலா – கலை மற்றும் பண்பாடு, வணிக வரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப் பதிவு, இந்து சமய அறநிலையத் துறை மீதான மானியக் கோரிக்கைகள் விவாதம் நடக்கிறது.

விவாதத்தில் பங்கேற்று பேசும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் பதில் அளித்து பேசுவதுடன் நிறைவாக தங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிடுவார்கள்.

The post என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது… appeared first on Dinakaran.

Tags : Nayanar Nagendran ,Tamil Nadu Legislative Assembly ,Minister ,Thangam Tennarasu ,
× RELATED தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது..!!