பேரவையில் நேற்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்ட அறிவிப்புகள்: தமிழ்நாடு பசுமை தொழில் முனைவோர் திட்டத்திற்கு 3 கோடி பயன்படுத்தப்படும். பசுமை பள்ளிக்கூட திட்டத்தின் தொடர்ச்சியாக 2024-25ம் ஆண்டில் 100 பள்ளிகளில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிதியிலிருந்து இத் திட்டம் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள திடக்கழிவு குப்பைக் கிடங்குகளில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்காணிப்பு தற்போதைய தேவையாக உள்ளது. ஆரம்ப கட்டமாக சென்னை பெருங்குடி, புதுக்கோட்டை திருக்கட்டளை ஆகிய மாநகராட்சி திடக்கழிவு கிடங்குகளில் ரூ. 4 கோடியில் வெப்ப புகைப்பட கருவி மற்றும் விஷவாயு கண்டறியும் சென்சார்கள் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள பெருநகரங்களில் ஒலி மாசு அதிகரிப்பால், மக்களின் உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்படுகிறது.
சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாநகராட்சிகளின் எல்லைக்குட்பட்ட முக்கிய பகுதிகளில் ஒலி மாசை, சென்சார் மூலம் அளவிடும் ஒலி மாசு வரைபட ஆய்வு ரூ. 50 லட்சத்தில் மேற்கொள்ளப்படும். புயல், வெள்ளம், வாயுக் கசிவு, தீ விபத்துகளின்போது வேதிப்பொருட்களை உடனடியாக கண்டறிந்து பொதுமக்களின் புகார்களை விரைவில் நிவர்த்தி செய்யும் வகையில் அதிநவீன கையடக்க கருவிகள் ரூ. 6 கோடியில் வாங்கப்படும்.
தமிழ்நாடு ஏரி தரக் கண்காணிப்பு திட்டமானது முக்கியத்துவம் வாய்ந்த நீர் ஆதாரங்களில் செயல்படுத்தப்படும். முதல் கட்டமாக பூண்டி, செம்பரம்பாக்கம், உதகமண்டலம் மற்றும் கொடைக்கானல் ஏரிகளில் செயல்படுத்தப்படும். கடலோர மாவட்டங்களில் கடற்கரை மாசை குறைக்கும் பணிகளுக்கு ரூ. 100 கோடி செலவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் ஒரு வாரம் முழுவதும் நெகிழிக் கழிவுகள் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
The post கடற்கரை மாசு குறைக்க ரூ.100 கோடியில் நடவடிக்கை திடக்கழிவு குப்பை கிடங்குகளில் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு: அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு appeared first on Dinakaran.