×

சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பஸ்சில் கஞ்சா கடத்தி விற்ற போலீஸ்காரர் சஸ்பெண்ட்: உதவியாக செயல்பட்டவரும் சிக்கினார்

ஊட்டி: சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பஸ்சில் கஞ்சா கடத்தி விற்று கைதான போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருக்கு உதவியாக செயல்பட்டவரையும் போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாபிரியா, மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமாரியம்மாள் தலைமையிலான போலீசார் ஊட்டி பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்தவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 200 கிராம் கஞ்சா இருந்தது. இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடந்தது. அப்போது அவர் திண்டுக்கல் மாவட்டம் வெல்வார்பேட்டை முத்தன்கோட்டை பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் (29) என்பதும், கடந்த 2020ல் தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீஸ்காரராக பணியில் சேர்ந்தவர் என்பதும், கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.

14வது பழனி பட்டாலியன் பிரிவில் உள்ள இவர், நீலகிரி மாவட்டம் பில்லூர் அணை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அணை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் சிறப்பு காவல் படை போலீசாரின் நீலகிரி மாவட்ட தலைமை அலுவலகம் ஊட்டியில் உள்ளது. இதனை பயன்படுத்தி இவர் தேனி மாவட்டத்தில் இருந்து பஸ்சில் கஞ்சா எடுத்து வந்து ஊட்டியில் கடந்த 4 மாதங்களாக விற்பனை செய்துள்ளார். இதைத்தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிந்து சவுந்தர்ராஜனை கைது செய்தனர்.

அவர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கைதான சவுந்தர்ராஜனின் தாய் கீரை வியாபாரம் செய்கிறார். தந்தை இறந்துவிட்டார். இந்த குடும்ப சூழ்நிலையில் சவுந்தர்ராஜன் இன்ஜினீயரிங் படித்து வேலைக்கு சென்றுள்ளார். தொடர்ந்து போலீஸ் தேர்வு எழுதி போலீஸ்காரராகி பணியில் சேர்ந்துள்ளார். எனினும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்ட அவர் கஞ்சா விற்பனையில் இறங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலீஸ் சீருடையில் வந்ததால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்படவில்லை. இதனை பயன்படுத்தி அடிக்கடி ஊட்டிக்கு பஸ்சில் கஞ்சா கொண்டு வந்துள்ளார். ஒவ்வொரு முறையும் 5 கிலோ வரை கொண்டு வந்து ஊட்டியில் உள்ள வியாபாரிகளுக்கு பிரித்து கொடுத்துவிட்டு செல்வாராம். இதுவரை பல லட்சம் சம்பாதித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே அது குறித்து விசாரணை நடக்கிறது. இவருடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் யார்? ஊட்டியில் யார் யாருக்கு கஞ்சா விற்பனை செய்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் அவர் கஞ்சாவை ஊட்டியில் விற்பனை செய்வதற்கு எச்பிஎப் பாரதிநகர் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ்வரன் (34) என்பவர் உதவியாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். போலீஸ்காரர் சவுந்தர்ராஜனுக்கு கிலோ கணக்கில் கஞ்சா விற்பனை செய்து வந்த தேனி மாவட்ட கஞ்சா வியாபாரிகள் குறித்தும் விசாரணை நடக்கிறது. எனவே, இவ்வழக்கில் மேலும் பல முக்கிய நபர்கள் சிக்க வாய்ப்புள்ளது.

* ஏற்கனவே 3 பேர் பணியிடை நீக்கம்
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2022ம் ஆண்டு சேரம்பாடி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த உடையார் செல்வம் (27), எருமாடு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த அமரன் (24), ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த விவேக் ஆகிய 3 பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* கைதிக்கு கஞ்சா சப்ளை ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிறைக்காவலர் சஸ்பெண்ட்
மதுரை மத்திய சிறை வளாகத்திற்குள் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்ல முடியாத வகையில் கடும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நீதிமன்ற விசாரணைக்கு சென்று திரும்பும் கைதிகளும், சிறைக்குள் செல்லும் போலீசாரும் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சிறையில் உள்ள கைதி செல்வகுமாருக்கு கஞ்சா வழங்கிட, அவரது நண்பர் ஒருவரிடம் சிறைக்காவலர் முகமது ஆசீப் ரூ.5 ஆயிரம் பெற்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் நடத்திய விசாரணையில், லஞ்சமாக பணம் பெற்றது உறுதியானதால் முகமது ஆசீப் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

The post சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பஸ்சில் கஞ்சா கடத்தி விற்ற போலீஸ்காரர் சஸ்பெண்ட்: உதவியாக செயல்பட்டவரும் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiri ,District ,West Police Inspector ,Meenapriya ,Women Police Inspector ,Muthumariammal ,
× RELATED நீலகிரி மாவட்ட விவசாய பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற முயற்சி