×

நாகை மீனவர்கள் 10 பேர் கொலை வழக்கில் கைது: இலங்கை கடற்படையின் அட்டூழியத்தால் கொந்தளிப்பு

நாகப்பட்டினம்: நாகை மீனவர்களின் விசைப்படகை இலங்கை கடற்படை சுற்றிவளைத்தபோது, தவறி விழுந்து ஒரு வீரர் பலியானார். இதையடுத்து மீனவர்கள் 10 பேர் மீது கொலை வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்த ஆனந்தன் (52) தனக்கு சொந்தமான விசைப்படகில், 9 மீனவர்களுடன் கடந்த 21ம் தேதி நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி விசைப்படகை சுற்றி வளைத்தனர். அப்போது இலங்கை கடற்படை வீரர் ரத்னநாயக் என்பவர், விசைப்படகை பிடிக்க முயற்சி செய்தார். இதில் அவர் எதிர்பாராத விதமாக நடுக்கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

பின்னர், நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து விசைப்படகு மற்றும் உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து விசைப்படகுடன் மீனவர்களை இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து சென்று தமிழக மீனவர்கள் 10 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திற்கு நேற்று காலை தகவல் தெரிய வந்தது. ஏற்கனவே ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post நாகை மீனவர்கள் 10 பேர் கொலை வழக்கில் கைது: இலங்கை கடற்படையின் அட்டூழியத்தால் கொந்தளிப்பு appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Navy ,Nagapattinam ,Anandhan ,Akkaripet ,Dinakaran ,
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகையில்...