×

சென்னை ஐகோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 கோடி மோசடி: கைதான கும்பல் குறித்து பரபரப்பு தகவல்

அருப்புக்கோட்டை: சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக தமிழகம் முழுவதும் ரூ.30 கோடி மோசடி செய்த கும்பல் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. மல்லாங்கிணறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளர். இவரது மனைவி சசி, அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை.

இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 50க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.50 லட்சம் வரை மோசடி செய்ததாக புகார் வந்தது. இதன்பேரில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து தம்பதியை கைது செய்தனர். இவர்களுக்கு துணையாக இருந்த காரியாபட்டியை சேர்ந்த சின்னசுப்பையா, ஆதிமூலம், நாராயணசாமி ஆகியோரையும் கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான திருப்பூரை சேர்ந்த நாகேந்திரகுமாரின் துணையோடு, தமிழகத்தில் 400க்கும் மேற்பட்டோரிடம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 கோடிக்கு மேல் சுருட்டியது தெரியவந்தது. இதையடுத்து அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்திரி தலைமையிலான விசாரணை குழுவினர், நாகேந்திரகுமாரை கைது செய்து போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.

விசாரணையில், சென்னை அமைந்தகரையை சேர்ந்த விஜயலட்சுமி ஜெயந்தி (36), அப்துல்காதர் (37), சையது இப்ராஹிம் (55) ஆகியோர் மோசடியில் முக்கிய பங்கு வகித்தது கண்டுபிடிக்கப்பட்டது. விஜயலட்சுமி ஜெயந்தி, அரசு முத்திரையுடன் கூடிய பணி நியமன ஆணை மற்றும் பயிற்சி ஆணை வழங்க உதவியுள்ளார்.

சையது இப்ராஹிம் உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி என கூறி மோசடிக்கு உறுதுணையாக இருந்துள்ளார். அப்துல் காதர் தனியாக உயர்நீதிமன்ற வெப்சைட் தொடங்கியுள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மூவரையும் நேற்று முன்தினம் தனிப்படையினர், சென்னையில் கைது செய்தனர். அவர்களை அருப்புக்கோட்டை அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இதுவரை 9 பேரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

The post சென்னை ஐகோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 கோடி மோசடி: கைதான கும்பல் குறித்து பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,Aruppukkottai ,Krishnasamy ,Palavanatham ,Virudhunagar district ,Mallanginaru Government Primary Health Center ,
× RELATED சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை...