×

சாதி மறுப்பு திருமணம் தொடர்பான அனைத்து வகை குற்றங்களிலும் வழக்குகளை விரைந்து நடத்த சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது தாக்குல் நடத்தப்பட்டது தொடர்பாக நாகைமாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), வானதி சீனிவாசன் (பாஜ), தி.வேல்முருகன் (தவாகா), எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக), சதன் திருமலைக்குமார் (மதிமுக), ம.சிந்தனை செல்வன் (விசிக), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனி ஸ்ட்), செ.ராஜேஷ்குமார் (காங்கிரஸ்) ஆகியோர் சட்டமன்றப் பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர்.

இதற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருவேறு சமூகத்தைச் சார்ந்த மணமக்களுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்து வைக்கப்பட்டு, அதுதொடர்பான புகைப்படம் முகநூல் பக்கத்திலே பதிவிடப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து, மணப்பெண்ணின் குடும்பத்தினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குச் சென்று தகராறில் ஈடுபட்டு, அங்கிருந்த பொருட்களைச் சேதப்படுத்தியிருக்கிறார்கள்.

இதுதொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களில் 7 பெண்கள் பிணையில் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். 7 ஆண்கள் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இவ்வழக்கில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளும் சேர்க்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உறுப்பினர்கள் குறிப்பிட்டபடி இதற்கென ஒரு சிறப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதைவிட, தற்போது இதுபோன்ற குற்றங்களுக்கு நடைமுறையிலுள்ள சட்டப்பிரிவுகள், குறிப்பாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில், தீவிரமான, வேகமான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது சரியான செயல் என்று இந்த அரசு கருதுகிறது.

இதுபோன்ற குற்றங்களில் வழக்குகளை முறையாக நடத்தி, குற்றவாளிகளைச் சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனைப் பெற்றுத்தருவது என்பது, புதிய சட்டங்களை இயற்றுவதைவிட சரியானதாக இருக்கும் என்று இந்த அரசு கருதுகிறது. சாதி மறுப்புத் திருமணம் தொடர்பான அனைத்து வகை குற்றங்களிலும் வழக்குகளை விரைந்து நடத்திட, அரசுத் தரப்பில் பிரத்யேகமாக சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள். அதேபோல தற்போது இதுபோன்ற குற்றங்களில் எல்லாம், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி காவல் ஆய்வாளர் விசாரணை அலுவலராக நியமிக்கப்படுகிறார்.

ஆனால், இவ்வழக்குகளில் விசாரணையின் தன்மையை மேலும் தீவிரப்படுத்தும் வகையிலும், வேகப்படுத்தும் நோக்கிலும் விசாரணை அலுவலராக காவல் துணைக் கண்காணிப்பாளரை நியமிப்பது குறித்து சட்ட ஆலோசனையைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இக்குற்றங்களைக் குறைக்கும் வகையில் மாவட்ட அளவிலான குழுக்கள், அவை அமைக்கப்பட்டதன் பின்னணி மற்றும் அவற்றின் செயல்பாடுகள் எவ்வாறு இருந்தன என்பதைப் பற்றியெல்லாம் மீண்டும் ஆய்வு செய்து, அதுகுறித்தும் தேவையான முடிவுகள் எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

The post சாதி மறுப்பு திருமணம் தொடர்பான அனைத்து வகை குற்றங்களிலும் வழக்குகளை விரைந்து நடத்த சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Special ,Prosecutors ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,Nagaimali ,Marxist Communist ,Vanathi Srinivasan ,BJP ,D. Velmurugan ,Dawaka ,M.H. Jawahirullah ,MAMAK ,Sadhan Thirumalikumar ,MDMK ,M.Sinthanai Selvan ,Communist Party of India ,Tirunelveli district ,Visika ,Ramachandran ,Community of India… ,M.K.Stal ,
× RELATED கெஜ்ரிவாலின் ஜாமீனுக்கு இடைக்கால தடை