×

அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வான 95 பேருக்கு பணி நியமன ஆணை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 95 நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து, கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் வாயிலாக 32,774 நபர்களுக்கும், பல்வேறு அரசுத் துறைகளில் நேரடி நியமனம், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் என பல்வேறு அமைப்புகளின் வாயிலாக 32,709 நபர்களுக்கும் என மொத்தம் 65,483 நபர்களுக்குப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 21 துணை ஆட்சியர்கள், 26 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 25 உதவி ஆணையர்கள் (வணிக வரிகள்), 13 கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், 7 உதவி இயக்குநர் (ஊரக வளர்ச்சி) மற்றும் 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் என மொத்தம் 95 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 14 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

பணிநியமன ஆணைகளை பெற்றுக் கொண்டவர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்தனர். தொடர்ந்து, தலைமைச் செயலாளர் புதிதாக பணி நியமனம் பெற்றவர்களை தமிழ்நாடு முதலமைச்சருக்கு அறிமுகம் செய்து வைத்தார். பணிநியமன ஆணைகள் பெற்றுக் கொண்ட பயிற்சி அலுவலர்களுக்கு வரும் ஜுலை 1ம் தேதி முதல் சென்னை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் அடிப்படைப் பயிற்சி தொடங்க உள்ளது.இந்நிகழ்ச்சியில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மனிதவள மேலாண்மைத் துறை செயலாளர் க. நந்தகுமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வான 95 பேருக்கு பணி நியமன ஆணை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Civil Servants Selection Board ,Chief Minister ,Mu. K. ,Stalin ,Chennai ,Chief Minister of ,Tamil Nadu ,Tamil Nadu Civil Servants Selection Board ,K. Stalin ,K. ,Tamil Nadu Civil Servants Election Commission ,Mu K. ,Dinakaran ,
× RELATED வீண் விளம்பரம் தேடுவதிலேயே...