×

பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியை பாதுகாக்கும் நோக்கில் காமாட்சி மருத்துவமனை முதல் துரைப்பாக்கம் வரை உயர்மட்ட சாலை மேம்பாலம்:  அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

* ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தில் ரூ.1055 கோடியில் திட்டப் பணிகள்

சென்னை: சென்னை வேளச்சேரி, கோயம்பேட்டில் எஸ்கலேட்டருடன் நடைமேம்பாலங்கள் மற்றும்‌ பள்ளிக்கரனை சதுப்பு நிலப்‌பகுதியை பாதுகாக்கும்‌ நோக்கில்‌ காமாட்சி மருத்துவமனை முதல்‌ துரைப்பாக்கம்‌ வரை உயர்மட்ட சாலை மேம்பாலம்‌ அமைத்தல், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும்‌ பணி ஆகியவை ரூ.36 கோடியில் மேற்கொள்ளப்படும்‌ என அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார். சட்டப் பேரவையில் நேற்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த பின்பு அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்ட அறிவிப்புகள்:

‘உங்கள்‌ தொகுதியில்‌ முதலமைச்சர்‌’ திட்டத்தின் கீழ் ஒரு புறவழிச்சாலை, ஒரு நடைமேம்பாலம், 6 சாலைகளை அகலப்படுத்தி மேம்பாடு செய்தல், 3 ஆற்றுப் பாலங்கள் மற்றும் ஒரு மழைநீர் வடிகால் கட்டுதல் ஆகிய பணிகளும் மற்றும் 6 புறவழிச்சாலைகள், ஒரு ஆற்றுப்பாலம் அமைக்க தேவையான நில எடுப்பு பணிகள் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களிடம்‌ பெறப்பட்ட கோரிக்கைகளைச்‌ செயல்படுத்த இரண்டாம்‌ கட்டமாக ரூ.1,055 கோடியில் பணிகள்‌ செயலாக்கத்திற்கு எடுத்துக்‌கொள்ளப்படும்‌.

நெடுஞ்சாலைத் துறையின்‌ செயல்பாட்டை மேலும்‌ மேம்படுத்த தற்போது உள்ள சில அலகுகளை மாற்றியமைத்து பணிகளைப்‌ பகிர்ந்து துறையின்‌ செயல்‌திறனை மேம்படுத்த, நெடுஞ்சாலைத்துறை மறு சீரமைப்பு செய்யப்படும். தமிழ்நாட்டில் பயன்பாட்டில் உள்ள 9479 பாலங்களை ஆய்வு செய்து, அதன்‌ உறுதித்‌ தன்மையைக்‌ கண்டறிந்து பழுதுகள்‌ ஏற்பட்டிருப்பின்‌ அதனை உடனுக்குடன்‌ சீரமைக்க வேண்டியுள்ளது. இதை செயல்படுத்த நிபுணத்துவம்‌ வாய்ந்த நெடுஞ்சாலைத் துறைப் பொறியாளர்களைக்‌ கொண்ட ‘‘பாலங்கள்‌ சிறப்பு ஆய்வு அலகு” உருவாக்கப்படும்‌.

முதலமைச்சர்‌ சாலை மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ நடப்பாண்டில்‌, 200 கி.மீ. நீளச்‌சாலைகளை நான்கு வழித்தடமாகவும்‌, 550 கி.மீ. நீளச்‌ சாலைகளை இரு வழித்தடமாகவும்‌ அகலப்படுத்தி மேம்படுத்தப்படும்‌. அனைத்து காலநிலைகளிலும்‌ தங்கு தடையற்ற போக்குவரத்து என்ற முதலமைச்சரின்‌ முத்தாய்ப்பான திட்டத்தின்‌ கீழ்‌, 50 தரைப்பாலங்கள்‌ உயர்மட்டப்‌ பாலங்களாக ரூ.200 கோடி மதிப்பீட்டில்‌ கட்டப்படும்‌. இந்த திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலை துறை சாலைகளில் உள்ள அனைத்து தரைப்பாலங்களும் உயர் மட்ட பாலங்களாக 2026ம் ஆண்டுக்குள் கட்டப்படும்.

விபத்தில்லா மாநிலம் என்ற இலக்கினை அடையும் வகையில், சாலைப்‌ பாதுகாப்பை மேம்படுத்தவும், நடப்பாண்டில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் சாலைச்‌ சந்திப்பு மேம்பாட்டுப்‌ பணிகள்‌ ரூ.300 கோடி மதிப்பீட்டில்‌ மேற்கொள்ளப்படும்‌. தென்காசி, ஆற்காடு, போடிநாயக்கனூர்‌, திருநெல்வேலி ஆகிய 4 நகரங்களுக்குப்‌ புறவழிச்‌சாலையும், ராஜபாளையம்‌ புதிய பேருந்து நிலையம்‌ முதல்‌ அரசு மருத்துவமனை வரை புதிய இணைப்புச்‌ சாலையும்‌ ரூ.321 கோடியில் அமைக்கப்படும்‌.

ராமேஸ்வரம்‌ சுற்று சாலை, திருச்செந்தூர்‌ சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குப்‌ புறவழிச்சாலை, திருத்துறைப்பூண்டி, வத்திராயிருப்பு, மல்லாங்கிணறு ஆகிய நகரங்களுக்குப்‌ புறவழிச்சாலை அமைக்கவும்‌, மதுரை வெளிவட்ட சாலை முதல்‌ சிவகங்கை சாலை வரை புதிய சாலை அமைக்கவும்‌, தஞ்சாவூர்‌ மற்றும்‌ அரியலூர்‌ மாவட்டங்களை இணைக்கும்‌ வகையில்‌ கொள்ளிடம்‌ ஆற்றின்‌ குறுக்கே உயர்மட்டப்‌பாலம்‌ அமைக்கவும்‌ தேவையான நில எடுப்புப்‌பணிகள்‌ ரூ.159 கோடியில் மேற்கொள்ளப்படும்‌.

விரிவான திட்ட அறிக்கை பணிகள்‌ மயிலாடுதுறை மற்றும்‌ கடலூர்‌ மாவட்டங்களை இணைக்கும்‌ வகையில்‌ மணல்மேடு முதல்‌ சேத்தியாத்தோப்பு வரை புதிய சாலை அமைக்கவும்‌, மதுரை மாநகரில்‌ சிட்டம்பட்டி முதல்‌ தென்காசி சாலையில்‌ உள்ள ஆலம்பட்டி வரை புதிய வெளிவட்டச்‌ சாலை அமைக்கவும்‌, விரிவான திட்ட அறிக்கை ரூ.59 லட்சத்தில் தயாரிக்கப்படும்‌.

சென்னை பெருநகர மாநகரப்‌பகுதியில்‌, வேளச்சேரி ரயில்‌நிலைய பேருந்து நிறுத்தம்‌, சென்னை உள்வட்டச்‌சாலையில்‌, கோயம்பேடு சந்திப்பு அருகே என 2 இடங்களில்‌ நகரும்‌ படிக்கட்டுகளுடன்‌ கூடிய நடை மேம்பாலம்‌ அமைத்தல்‌ மற்றும்‌ பள்ளிக்கரனை சதுப்பு நிலப்‌பகுதியை பாதுகாக்கும்‌ நோக்கில்‌ காமாட்சி மருத்துவமனை முதல்‌ துரைப்பாக்கம்‌ வரை, உயர்மட்ட சாலை மேம்பாலம்‌ அமைக்கவும்‌, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும்‌ பணிகள்‌ ரூ.36 கோடியில் மேற்கொள்ளப்படும்‌.

திண்டுக்கல்‌ மாவட்டத்தில்‌, ஒட்டன்சத்திரம்‌ நகரிலும்‌ மற்றும்‌ திருவண்ணாமாலை புதிய பேருந்து நிலையம்‌ அருகிலும்‌, நகரும்‌ படிக்கட்டுகளுடன்‌ கூடிய, நடை மேம்பாலம்‌ ரூ.28 கோடியில் அமைக்கப்படும்‌. தொழிற்சாலைகளை இணைக்கும்‌ வகையில்‌ உள்ள சாலைகளை மேம்படுத்த ரூ.200 கோடியில் பணிகள்‌ செயலாக்கப்படும்‌. நெடுஞ்சாலைத்துறையில்‌ நவீன அறிவியல்‌ மற்றும்‌ தொழில்‌நுட்பத்தைப்‌ பயன்படுத்தி மலைப்பகுதிகளில்‌ நிலச்சரிவுகள்‌ ஏற்படுவதைத்‌ தடுக்க ரூ.25 கோடியில் பணிகள்‌ மேற்கொள்ளப்படும்‌.  ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியச்‌ சாலைகளில்‌ 600 கி.மீ. சாலைகள்‌, ரூ.680 கோடி மதிப்பீட்டில்‌ இதர மாவட்டச்‌ சாலைகளாகத்‌ தரம்‌ உயர்த்தப்படும்‌.

The post பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியை பாதுகாக்கும் நோக்கில் காமாட்சி மருத்துவமனை முதல் துரைப்பாக்கம் வரை உயர்மட்ட சாலை மேம்பாலம்:  அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kamachi Hospital ,Durai Pakkam ,Pallikaranai mangrove ,Minister AV Velu ,Chennai ,Chennai Velachery, ,Coimbatore ,Duraipakam ,Pallikarnai Swamp ,Dinakaran ,
× RELATED திடீரென டயர் வெடித்ததால் கல்லூரி...