×

நனவாகும் கனவு

ஒன்றிய அளவில் வேலைவாய்ப்பின்மை பல மாநிலங்களில் இரட்டை இலக்கத்தில் உச்சத்தில் இருக்க, தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை சதவீதம் ஐந்திற்கும் கீழாக உள்ளது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தமிழகத்தில் தொழில்துறையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், வேலைவாய்ப்பில் உற்பத்தியின் பங்கு 6 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதேபோல் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறை, விவசாயத் துறை, மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம், ஹோட்டல், சுற்றுலா ஆகியவற்றிலும் பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசிற்கே வழிகாட்டும் வகையில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் தமிழக திராவிட மாடல் ஆட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சீரிய முயற்சியால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. உலகளவில் அதிக இளைய சமுதாயத்தை கொண்டுள்ள இந்தியாவில் இளைஞர் எதிர்காலத்தை கருத்தில் வைத்து திராவிட மாடல் ஆட்சியில் திட்டங்கள் தீட்டப்பட்டு வருவது கண்கூடு. இதற்கு கல்வித்துறையில் தமிழகம் ஓங்கி நிற்பதும் ஓர் முக்கிய காரணம்.

கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு முகமைகள் மூலம் 32,774 பேர், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் போன்ற பல்வேறு அரசு அமைப்புகளில் 32,709 இளைஞர்கள் என மொத்தம் 65,483 இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் கிடைத்த பெரும் முதலீடுகள் காரணமாக லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் தெரிவித்த தகவல்களின்படி கடந்த 3 ஆண்டுகளில் 77 லட்சத்து 78 ஆயிரத்து 999 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களுக்குத் தொழிலாளர் வைப்பு நிதி கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளன.

முதல்வரின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களில் இதுவரை, 3 லட்சத்து 6 ஆயிரத்து 459 பேர், தொழிலாளர் நலத்துறையின் மூலம் நடத்தப்பட்ட சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக 2 லட்சத்து ஆயிரத்து 596 இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டது. இதன்மூலம் 5 லட்சத்து 8 ஆயிரத்து 55 தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி வரும் ஜனவரி 2026க்குள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக 17 ஆயிரத்து 595 பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19 ஆயிரத்து 260 ஆசிரியப் பணியிடங்கள், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3 ஆயிரத்து 41 பணியிடங்கள், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 6 ஆயிரத்து 688 பணியிடங்கள் என மொத்தம் 46 ஆயிரத்து 584 பணியிடங்கள், சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் காலியாக இருக்கக்கூடிய 30 ஆயிரத்து 219 பணியிடங்கள் என மொத்தம் 75,000க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். இளைஞர்கள்தான் நம் பலம். நமது எதிர்கால வளத்திற்கு அவர்களே அடிப்படையானவர்கள் என்பதை உணர்ந்த திராவிட மாடல் அரசின் சாதனைகள் பலரின் கனவை நனவாக்கி வருகிறது.

The post நனவாகும் கனவு appeared first on Dinakaran.

Tags : Union ,Tamil Nadu ,India's Economic Observatory ,Dinakaran ,
× RELATED திருமணமான பெண்களை பணியமர்த்த...