×

மழை வெள்ளத்தால் பாதித்த பகுதிகளில் ரூ.725 கோடியில் சீரமைப்பு பணிகள்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரூ.725 கோடியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், இதுவரை ரூ.1,397 கோடி மதிப்பீட்டில், 166 கி.மீ. சாலைகள் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட உள்ளன.

இத்திட்டத்தில், 185 கி.மீ. நான்குவழிச் சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கிராமச் சாலைகளை மேம்படுத்துவதில் அரசு தனிக் கவனம் செலுத்துகிறது. கடந்தாண்டு 780 கிமீ நீளச்சாலைகள் ரூ.878 கோடியில் மேம்பாட்டுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டில் 1,735 கிமீ நீளச் சாலைகள், ரூ.1,903 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் உள்ளாட்சி சாலைகளில் 246 பாலங்கள் ரூ.833 கோடியில் கட்டப்பட்டு தங்கு தடையற்ற போக்குவரத்து உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு முதல்வரின் ஆலோசனைப்படி சாலைகளில் பள்ளங்கள் இருந்தால் அவற்றை யாரிடம் சொல்வது, எவ்வாறு புகார் அளிப்பது என்ற சந்தேகத்தை நீக்கும் வகையில் பொதுமக்களின் பங்களிப்புடன் “நம்ம சாலை செயலி“ எனும் திட்டம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் கடந்தாண்டு தொடங்கப்பட்டது. செல்போன் மூலம் புகார் பெறப்பட்டது முதல், மாநில நெடுஞ்சாலைகளில் 24 மணி நேரத்திலும், மாவட்ட முக்கிய சாலைகள், மாவட்ட இதர சாலைகளில் 72 மணி நேரத்திலும் சாலையில் உள்ள பள்ளங்கள் சரி செய்யப்படுகின்றன.

இதுவரை, 8,650 புகார்கள் பெறப்பட்டு, அவைகள் சரி செய்யப்பட்டுள்ளன. நிரந்தர வெள்ள சீரமைப்புப் பணிகளில் மிக்ஜாம் புயல் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களையும், அதைப்போல, தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், இதுவரை வரலாறு காணாத அளவில் பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சாலைகள் மற்றும் சிறு பாலங்கள், பாலங்கள் சேதமடைந்தன.

கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், நெடுஞ்சாலைத்துறை மூலமாக 800 சாலைப் பணியாளர்களும், 75 பொறியாளர்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டனர். போர்க்கால அடிப்படையில், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, சாத்தான்குளம், திருச்செந்தூர், ஒட்டப்பிடாரம் மற்றும் கோவில்பட்டி போன்ற இடங்களில் இரவும் பகலும் தற்காலிக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு குறுகிய காலத்தில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் நகரில் பெய்த வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாலம் உடைந்து, ஊரின் ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்திற்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. அப்போது துறையின் செயலாளர்கள் பிரதீப் யாதவ், சந்திரமோகன் ஜேசிபி வாகனத்தில் நின்றுகொண்டு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர். மேலும் தாங்கள் ஒரு ஐஏஎஸ் அதிகாரிகள் என்பதை மறந்து என்னுடன் இணைந்து சாலையில் உணவு சாப்பிட்டு வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொண்டனர். 2023-24ம் நிதியாண்டில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரூ.725 கோடி மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் பயணியர் முனையம் அமைக்கப்பட்டு கடந்தாண்டு பயணியர் கப்பல் இலங்கையிலுள்ள காங்கேசன்துறை துறைமுகத்திற்கு தொடங்கி வைக்கப்பட்டது. ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து துவக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 2023 அக்டோபர் மாதத்தில், மும்பையில் நடைபெற்ற “உலகளாவிய கடல்சார் உச்சி மாநாட்டில்“, முதல்வரின் உத்தரவின் பேரில் நானே நேரில் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில், துறைமுகம் மற்றும் கடல்சார் மேம்பாட்டில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு நேரடி அழைப்பு விடுத்தேன்.

ஒன்றிய அரசின் சாகர்மாலா திட்டத்தின்கீழ் குமரிமுனையில், கலைஞரால் நிறுவியுள்ள திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறையையும், இணைக்கும் பாதசாரிகள் நடை மேம்பாலம் ரூ.37 கோடியில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம், 1974ல் நிறுவனங்கள் சட்டம் 1956ன்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மின் உற்பத்திக்குத் தேவைப்படும் மொத்த நிலக்கரியை எடுத்து வருவதற்காக நிறுவப்பட்டது.

அந்நிறுவனத்தின் வல்லூர், வட சென்னையில் அமைந்துள்ள 3×500 மெகாவாட் திறன் படைத்த அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை வாடகைக்கு அமர்த்தப்பட்ட கப்பல்கள் மூலமாக எடுத்துவரும் பணியினை மேற்கொண்டுள்ளது. கன்னியாகுமரி படகுத்துறையில் இருந்து ‘விவேகானந்தா நினைவுப் பாறை, திருவள்ளுவர் சிலை மற்றும் வட்டக்கோட்டை’ வரை படகுப் போக்குவரத்தினையும் மேற்கொண்டு வருகிறது.

பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக லாபத்தில் இயங்கி வருகின்றது. மேலும், இந்நிறுவனத்தை மேம்படுத்த தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு பல்வேறு துறைகளிலும் சாதனைகள் படைத்து இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. இதர மாநிலங்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக விளங்குகிறது என்பதற்கு ஒரு உதாரணம். ‘காலை உணவுத் திட்டத்தை’ தொடங்கியவர் திராவிட மாடல் நாயகர்.

தெலுங்கானா மாநில அதிகாரிகள் சென்னை வந்து பார்வையிட்டு தெலுங்கானா மாநிலத்திலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர். இலங்கையின் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்கே, கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ரூடோ, தமிழ்நாட்டைப் போல் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தப்படுத்துகிறார்கள். இப்படி, உலக அளவில் செயல்படுத்துவதன் மூலம், உலகத்திற்கே வழிகாட்டும் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

* ராமேஸ்வரம்-தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை

* குமரிமுனையில் திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் பாறை இணைக்க மேம்பாலம்

The post மழை வெள்ளத்தால் பாதித்த பகுதிகளில் ரூ.725 கோடியில் சீரமைப்பு பணிகள்: அமைச்சர் எ.வ.வேலு தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,AV Velu ,CHENNAI ,Tamil Nadu Legislative Assembly ,Public Works Department ,Highways ,Minor Ports ,
× RELATED சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில்..!!