×

1976க்கு பிறகு முதல் முறையாக தேர்தல் மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா – கே.சுரேஷ் போட்டி: இன்று வாக்குப்பதிவு நடக்கிறது

புதுடெல்லி: நாடாளுமன்ற வரலாற்றில் 1976க்கு பிறகு முதல் முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல் நடக்க உள்ளது. இதில் பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும் முன்னாள் சபாநாயகருமான ஓம் பிர்லாவை எதிர்த்து 8 முறை எம்பியான காங்கிரசின் கே.சுரேஷ் போட்டியிடுகிறார். 18வது மக்களவை கூட்டத் தொடர் நேற்று முன்தினம் கூடிய நிலையில், முதல் 2 நாட்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் பதவியேற்றுள்ளனர். அதைத் தொடர்ந்து, சபாநாயகர் தேர்வு செய்யப்பட வேண்டியது மரபு.

நாடாளுமன்ற விதிப்படி, மக்களவை சபாநாயகரை ஆளுங்கட்சியானது அனைத்து தரப்பினர் ஒப்புதலுடன் ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டும். கடந்த 2 முறை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சிக்கும் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்காததால், துணை சபாநாயகர் பதவி நியமிக்கப்படாமலேயே இருந்தது. இம்முறை காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்று 10 ஆண்டுக்குப் பிறகு எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. எனவே தங்களுக்கு துணை சபாநாயகர் பதவி ஒதுக்கும்பட்சத்தில், ஆளுங்கட்சியின் சபாநாயகர் தேர்வை ஏற்போம் என ஏற்கனவே கூறியிருந்தனர்.

இதற்காக நேற்று காலை காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால் மற்றும் திமுக எம்பி டி.ஆர்.பாலு ஆகியோர் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அலுவலகத்தில் அவரை சந்தித்து பேசினர். அப்போது துணை சபாநாயகர் பதவியை காங்கிரசுக்கு ஒதுக்குவதாக உறுதி அளிக்காமல் சபாநாயகர் பதவிக்கு ஒப்புதல் தர முடியாது என அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்து வெளியேறினர். ஆனால் பாஜ தரப்பில் துணை சபாநாயகர் பதவி குறித்து எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை.

மாறாக, சபாநாயகராக ஓம் பிர்லாவை நியமிக்க ஆதரவு தருமாறு ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் அணுகினர். இதை ஏற்க காங்கிரஸ் தரப்பில் மறுக்கப்பட்டது. இதனால் ஒருமித்த முடிவு ஏற்படாததால், தேர்தல் நடத்தி சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பகல் 11.30 மணிக்கு பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஓம் பிர்லாவும், இந்தியா கூட்டணி வேட்பாளராக காங்கிரசின் மூத்த எம்பி கே. சுரேஷ் நண்பகல் 12 மணிக்கும் சபாநாயகர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தனர். 1976க்கு பிறகு சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடப்பது இதுவே முதல் முறை.

சபாநாயகர் பதவிக்கு இன்று வாக்குப்பதிவு நடத்தப்படும். பாஜ கூட்டணிக்கு 293 எம்பிக்களும், இந்தியா கூட்டணிக்கு 234 எம்பிக்களும் உள்ளனர். எனவே எஞ்சிய 16 எம்பிக்களும் இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்தாலும் வெற்றி பெறத் தேவையான 272 எண்ணிக்கையை பெற முடியாது. எனவே ஓம்பிர்லா மீண்டும் சபாநாயராக தேர்வு செய்யப்படுவது நிச்சயம் என்றாலும், சபாநாயகர் விஷயத்தில் கூட எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெற முடியாதது ஆளுங்கட்சியின் மிகப்பெரிய தோல்வியாக பார்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, தங்களை கலந்தாலோசிக்காமல் காங்கிரஸ் சபாநாயகர் வேட்பாளரை அறிவித்திருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கூறி உள்ளது.

* நிபந்தனை விதிக்கக் கூடாது
ஒன்றிய அமைச்சர்கள் ராஜீவ் ரஞ்சன் சிங் மற்றும் பியூஸ் கோயல் அளித்த பேட்டியில், ‘‘எதிர்க்கட்சிகள் நிபந்தனை விதிப்பது தவறு. துணை சபாநாயகர் பதவிக்கான நேரம் வரும் இந்த பிரச்னை குறித்து விவாதிக்கலாம் என ராஜ்நாத் சிங் அவர்களிடம் கூறி உள்ளார். ஆனால் அதை ஏற்காமல், உடனடியாக பதவியை விரும்புகின்றனர். அத்தகைய நிபந்தனைகளுக்கு பாஜ கூட்டணி உடன்படாது’’ என்றனர்.

* மோடி பேசுவது ஒன்று செய்வது வேறொன்று
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், ‘‘சபாநாயகர் விஷயத்தில், துணை சபாநாயகர் பதவி எங்களுக்கு தந்தால், ஆளும்தரப்பை ஆதரிப்பதாக அனைத்து எதிர்க்கட்சிகளும் கூறுகின்றன. ஆனால் எங்கள் கோரிக்கைக்கு இதுவரை ஆளும் தரப்பு சம்மதிக்கவில்லை. துணை சபாநாயகர் பதவி குறித்து விரைவில் பதிலளிப்பதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் போனில் பேசினார்.

ஆனால் அடுத்து அவரிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு வேண்டுமென பேசும் பிரதமர் மோடி இப்படி எங்கள் தலைவர்களை அவமதிக்கலாமா? மோடி பேசுவது ஒன்று, செய்வது வேறொன்றாக இருக்கிறது. துணை சபாநாயகர் விஷயத்தில் மோடியின் நோக்கம் என்ன என்பது தெளிவாக தெரியவில்லை’’ என்றார்.

* காங் எம்பிக்களுக்கு கொறடா உத்தரவு
சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெறுவதையொட்டி, காங்கிரஸ் எம்பிக்கள் அனைவரும் மக்களவையில் இன்று தவறாது பங்கேற்க வேண்டுமென கட்சி கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், ‘‘மக்களவையில் உள்ள நாளை (இன்று) முக்கியமான அலுவல் நடைபெற உள்ளதால் அனைத்து காங்கிரஸ் உறுப்பினர்களும் காலை 11 மணி முதல் அவை ஒத்திவைக்கப்படும் வரை தவறாமல் அவையில் இருக்க வேண்டும். கட்சி நிலைப்பாட்டிற்கு ஆதரவளிக்கவும் கேட்டுக்கொள்கிறோம்’’ என உத்தரவிடப்பட்டிருப்பதாக கட்சியின் தலைமைக் கொறடா கே.சுரேஷ் தெரிவித்தார்.

* சபாநாயகர் பதவிக்கு இதுவரை நடந்த தேர்தல்கள்
மக்களவை சபாநாயகர் பதவிக்கு கடைசியாக கடந்த 1976 ஜனவரியில் தேர்தல் நடந்தது. அப்போது காங்கிரசை சேர்ந்த பாலி ராம் பகத் 344 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு எதிராக போட்டியிட்ட ஸ்தாபன காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிட்ட ஜெகநாத ராவுக்கு 58 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.

அதற்கு முன், 1952ல், காங்கிரசின் ஜி.வி.மாவலங்கர், இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சியின் சங்கர் சாந்தாராம் மோரை தோற்கடித்து, சபாநாயகரானார். மக்களவையில் காங்கிரஸின் பெரும்பான்மை காரணமாக மாவலங்கர் எளிதாக வெற்றி பெற்றார். கடந்த 1998-ம் ஆண்டு சபாநாயகர் பதவிக்கு பி.ஏ.சங்மாவின் பெயரை சரத் பவார் முன்மொழிந்து கொண்டு வந்த தீர்மானம் தோற்றகடிக்கப்பட்டது.

அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய், தெலுங்கு தேசம் கட்சியின் ஜிஎம்சி பாலயோகி பெயரை முன் மொழிய அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால், பாலயோகி சபாநாயகரானார். அப்போது வாக்கெடுப்பு எதுவும் நடைபெறவில்லை. சுதந்திரத்திற்கு முன், சபாநாயகர் பதவிக்கான தேர்தல் 1925 மற்றும் 1946 க்கு இடையில் ஆறு முறை நடந்தது. 1925 இல், மத்திய சட்டமன்றத்தின் சபாநாயகருக்கான தேர்தலில் ரங்காச்சாரியை எதிர்த்து சுவராஜிய கட்சியின் தலைவர் விட்டல்பாய் ஜே படேல் வெற்றி பெற்றார்.

1930ல் நந்த் லாலின் 22 வாக்குகளுக்கு எதிராக 78 வாக்குகள் பெற்று சர் முகமது யாகூப் சபாநாயகர் ஆனார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஹரி சிங் கவுருக்கு எதிராக சர் இப்ராகிம் ரஹிம்தூலா தேர்தலில் வெற்றி பெற்றார். பின்னர் 1935ல், டி.ஏ.கே.ஷெர்வானிக்கு எதிராக போட்டியிட்ட சர் அப்துர் ரஹீம் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 1946ல் கோவாஸ்ஜி ஜஹாங்கிரை காங்கிரஸ் தலைவர் ஜி.வி.மவ்லாங்கர் வெறும் மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சபாநாயகர் ஆனார்.

* எங்கள் உரிமையை தராததால் போட்டி
இந்தியா கூட்டணி சார்பில் சபாநாயகர் பதவிக்கு நிறுத்தப்பட்டுள்ள கே.சுரேஷ், கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கொடிக்குன்னில் பிறந்தவர். 8 முறை மக்களவை எம்பியாக வெற்றி பெற்று தற்போதைய நாடாளுமன்றத்தில் அதிக முறை எம்பியாக இருப்பவர் என்ற பெருமைக்குரியவர். தலித் சமூகத்தை சேர்ந்தவர். வேட்புமனு தாக்கல் செய்த பின் அவர் அளித்த பேட்டியில், ‘‘இந்த தேர்தல் வெற்றி, தோல்வி பற்றியது அல்ல. சபாநாயகர் ஆளும் கட்சியாகவும், துணை சபாநாயகர் எதிர்க்கட்சியாகவும் இருக்க வேண்டியது மரபு.

கடந்த 2 முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்து இல்லை என்பதற்காக எங்களுக்கு துணை சபாநாயகர் பதவி தர மறுத்தனர். இப்போது எதிர்க்கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளோம். துணை சபாநாயகர் பதவி எங்கள் உரிமை. அதை தர அவர்கள் தயாராக இல்லை. இந்த விஷயத்தில் ஆளும்தரப்பின் பதிலுக்காக பிற்பகல் 11.50 மணி வரை காத்திருந்தோம். எந்த பதிலும் வராததால் சபாநாயகர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தோம்’’ என்றார்.

The post 1976க்கு பிறகு முதல் முறையாக தேர்தல் மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா – கே.சுரேஷ் போட்டி: இன்று வாக்குப்பதிவு நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Om Birla - K. Suresh ,Lok Sabha ,Speaker ,New Delhi ,K. Suresh ,Congress ,BJP ,NDA ,Om Birla ,Dinakaran ,
× RELATED மீண்டும் மக்களவை சபாநாயகராக ஓம்...