×

6 பாரம்பரிய கட்டிடங்கள் ரூ.43.34 கோடியில் மறுசீரமைப்பு தி.நகர் காமராஜர் இல்லம் ரூ.2.60 கோடியில் புனரமைப்பு: பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ள 6 பாரம்பரிய கட்டிடங்கள் ரூ.43.34 கோடியில் மறு சீரமைத்து புனரமைக்கப்படும் என்றும், அதில் சென்னை காமராஜர் இல்லம் ரூ.2.60 ேகாடியில் புனரமைக்கப்படும் என்றும் அமைச்சர் எ.வ.வேலு பேரவையில் அறிவித்தார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த பின்பு அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: பாரம்பரியக் கட்டிடங்களைப் புனரமைக்கும் பணிகளை செம்மைப்படுத்தும் வகையில் சென்னையில் மரபு கட்டிடங்கள் வட்ட அலுவலகம் ஏற்படுத்தப்படும். தமிழகத்தில் உள்ள 6 பாரம்பரிய கட்டிடங்கள் ரூ.43.34 கோடி மதிப்பீட்டில் மறு சீரமைத்து புனரமைக்கப்படும்.

அதன்படி, சென்னை தி.நகரில் உள்ள காமராஜர் இல்லம் ரூ.2.60 கோடியில் புனரமைக்கப்படும்.
* பூந்தமல்லியில் உள்ள விக்டரி நினைவு பார்வையற்றோர் பள்ளிக் கட்டிடம் ரூ.24.20 கோடியில் புனரமைக்கப்படும்.
* நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் உள்ள மெட்ராஸ் இலக்கிய சங்கக்கட்டிடம் ரூ.6.19 கோடியில் புனரமைக்கப்படும்.
* திருச்சி டவுன்ஹாலில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கட்டிடம் ரூ.4.85 கோடியில் மறுசீரமைத்து புனரமைக்கப்படும்.
* கன்னியாகுமரி இடலாக்குடியில் அமைந்துள்ள சதாவதானி செய்குதம்பி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள கட்டிடம் ரூ.3 கோடியில் மறுசீரமைத்து புனரமைக்கப்படும்.
* ராணிப்பேட்டை பாலாறு நதிக்கரையிலுள்ள தேசிங்கு ராஜா மற்றும் ராணிபாய் நினைவுச் சின்னங்கள் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைத்து புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
* நான்கு தரக் கட்டுப்பாட்டு உபகோட்ட அலுவலகங்களுக்கு ஆய்வகங்கள், ஆய்வக உபகரணங்களுடன் ரூ.6 கோடியில் உருவாக்கப்படும்.
* கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் புதியதாக ஒரு ஆய்வு மாளிகை கட்டப்படும். இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

The post 6 பாரம்பரிய கட்டிடங்கள் ரூ.43.34 கோடியில் மறுசீரமைப்பு தி.நகர் காமராஜர் இல்லம் ரூ.2.60 கோடியில் புனரமைப்பு: பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : D.Nagar Kamaraj House ,Minister ,AV Velu ,CHENNAI ,Tamil Nadu ,Kamarajar House ,Public Works Department ,Tamil Nadu Legislative Assembly ,Assembly ,Dinakaran ,
× RELATED விஷச் சாராயத்தால்...